கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரஞ்சு ஓபன் தொடர் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆடவர் பிரிவுக்கான மூன்றாவது சுற்று ஆட்டம் நடைபெற்றது.
இந்தத் தொடரில் 12ஆவது முறையாக பிரஞ்சு ஓபன் பட்டத்தை வெல்வதற்காக விளையாடி வரும் ஸ்பெயின் நட்சத்திர வீரர் நடாலை எதிர்த்து பெல்ஜிய வீரர் டேவிட் கோஃபின் விளையாடினார். இதில், நடாலின் ஆக்ரோஷமான ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாத கோஃபின் 6-1 என முதல் செட்டை இழந்தார். இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட்டையும் நடால், 6-3 எனக் கைப்பற்ற, ஆட்டம் எளிதாக முடிந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
![ரஃபேல் நடால்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3441022_nadallll.jpg)
ஆனால் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டேவிட் கோஃபின் மூன்றாவது செட்டை யாரும் எதிர்பார்க்காத வகையில், 4-6 எனக் கைப்பற்றி அதிர்ச்சியளித்தார். இதனால் ஆட்டம் பரபரப்பானது.
பின்னர் நடைபெற்ற நான்காவது செட்டில் மிகவும் ஆக்ரோஷத்துடன் ஆடிய நடால், அந்த செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். இதன் மூலம் கோஃபினை அவர் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டத்தில் நடால் மைதானத்தை கவர் செய்து ஆடிய கிராஸ் கோர்ட் ஷாட்கள் அவரின் ரசிகர்களை உற்சாகமடைய செய்தது. நான்காவது சுற்றில் ரஃபேல் நடால் அர்ஜெண்டினாவின் லாண்டரோவை சந்திக்க இருக்கிறார்.