2019ஆம் ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிப் போட்டியில் நட்சத்திர ஸ்விஸ் வீரர் ஃபெடரரை எதிர்த்து சகநாட்டு வீரர் வாவ்ரிங்கா விளையாடினார்.
ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டம் தொடக்கம் முதலே ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. முதல் செட் ஆட்டம் தொடக்கம் முதலே அனல் பறக்கும் காட்சிகளால் சுசான்னே லென்கிலின் கோர்ட் சூழப்பட்டது.
முதல் செட்டில் இரு வீரர்களும் தங்களது திறமையை நிரூபிக்கும் வகையில் விளையாடினர். இதனையடுத்து முதல் செட்டை நீண்ட போராட்டத்திற்கு பிறகு, ஃபெடரர் 7-6 எனக் கைப்பற்றினார். இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட்டை 6-4 எனக் கைப்பற்றி ஃபெடரருக்கு வாவ்ரிங்கா பதிலடிக் கொடுக்க, ஆட்டம் பரபரப்பின் உச்சத்திற்கே சென்றது.
இதனையடுத்து நடைபெற்ற மூன்றாவது சுற்றை இரு வீரர்களும் கைப்பற்ற மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஃபெடரரின் துல்லியமான ஷாட்களால் மூன்றாவது செட்டை 7-6 என கைப்பற்ற, நான்காவது செட்டை ஆக்ரோஷத்துடன் ஆடிய ஃபெடரர் 6-4 எனக் கைப்பற்றி, பிரெஞ்சு ஓபன் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.