உலகின் முன்னணி டென்னிஸ் நட்சத்திரமாக வலம்வருபவர் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் ஃபெடரர். தற்போது கரோனா வைரஸ் காரணமாக விம்பிள்டன், பிரெஞ்சு ஓபன், யுஎஸ் ஓபன் உள்ளிட்ட முக்கியத் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தனது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால், ஃபெடரர் 2020ஆம் ஆண்டில் மீதமுள்ள சீசன்களில் இருந்து வெளியேறுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அன்புள்ள ரசிகர்களே, நீங்கள் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். சில வாரங்களுக்கு முன்பு, எனது வலது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நான் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டில் மீதமுள்ள சீசன்களில் இருந்து வெளியேறுவதாக முடிவு செய்துள்ளேன். ஆனால் 2021 சீசனின் தொடக்கத்தில் அனைவரையும் திரும்பிப் பார்க்க ஆவலுடன் காத்திருப்பேன். ஆல் தி பெஸ்ட், ரோஜர்" என குறிப்பிட்டுள்ளார்.
ஸ்விஸ் நாட்டின் நட்சத்திர வீரராக வலம் வரும் ரோஜர் பெடரர் இதுவரை 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் டென்னிஸ் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் சமீபத்தில் வெளியான ஃபோர்ப்ஸின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.