டென்னிஸ் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜாம்பவான் வீரர் என்ற பெயரை பெற்றவர் சுவிட்சர்லாந்தின் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர். 20 கிராண்ட் ஸ்லாம் பட்டம், 100 ஏடிபி சாம்பியன் பட்டம், 1200 வெற்றிகள் என பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் ஃபெடரர், காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டோமினிகிடம் தோல்வி அடைந்தார். இந்தத் தொடரை அடுத்து இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 15ஆம் தேதி, இத்தாலி தலைநகர் ரோமில் களிமண் ஆடுகளத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இந்தத் தொடரில் தான் பங்கேற்கப் போகிறேன் என்ற மகிழ்ச்சியான தகவலை ஃபெடரர் அறிவித்துள்ளார். கிராண்ட் ஸ்லாம்களில் ஒன்றான ஃபிரெஞ்ச் ஒபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்று பட்டத்தை வெல்லவே, ஃபெடரர் தற்போது இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் கலந்துக்கொள்கிறார் என, டென்னிஸ் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஃபிரெஞ்ச் ஒபன் டென்னிஸ் தொடர், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வரும் 26ஆம் தேதி முதல் ஜூன் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. களிமண் ஆடுகளத்தில் நடைபெறும் இந்தத் தொடரில் ஃபெடரர், 2015ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் பங்கேற்கிறார். இதுவரை ஃபெடரர் ஒரேயொரு முறைதான் ஃபிரெஞ்ச் ஒபன் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.