டென்னிஸ் விளையாட்டில் தலைசிறந்த வீரராகத் திகழ்பவர் செர்பியாவின் நோவாக் ஜோகோவிக். ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என மொத்தம் இதுவரை 16 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இறுதியாக, நியூயார்க்கில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் காயம் காரணமாக அவர் நான்காவது சுற்றிலிருந்தே வெளியேறினார்.
அதன்பிறகு, டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான் ஓபன் தொடரில் முதல்முறையாக பங்கேற்றார். இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் அவர், ஆஸ்திரேலிய வீரர் ஜான் மில்மேனை எதிர்கொண்டார். ஆட்டம் தொடங்கியதிலிருந்தே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிக் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஜான் மில்மேனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.
இதன் மூலம், அறிமுக தொடர்களில் சாம்பியன்ஷிப் பட்டத்தை 10ஆவது முறையாக ஜோகோவிக் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இனி 'நோவாக் நோவாக்' என்ற குரல்கள் அதிகமாக எழும்!