இந்த ஆண்டுக்கான துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், 2016ஆம் ஆண்டுக்குப் பின், இந்தத் தொடரில் உலகின் முதல் நிலை வீரரும், செர்பியாவின் நட்சத்திர வீரருமான நோவாக் ஜோகோவிச் பங்கேற்றார். இதையடுத்து, நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் அவர், துனிசியாவைச் சேர்ந்த மலெக் ஜாஸ்ரியை எதிர்கொண்டார்.
ஆட்டம் தொடங்கியதிலிருந்தே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் மலெக் ஜாஸ்ரியை வீழ்த்தி, இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதைத்தொடர்ந்து, நாளை நடைபெறும் இரண்டாம் சுற்றுப் போட்டியில் அவர், ஜெர்மனியின் ஃபிலிப் கோல் ஸ்கிரீபருடன் மோதவுள்ளார்.
"வெற்றியுடன் இந்தத் தொடரை தொடங்கியிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இத்தனை நாட்களாக நான் இங்கு விளையாடாமல் இருந்ததை மிகவும் மிஸ் செய்தேன். இங்கு விளையாடுவதில் எனக்கு எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும்" என போட்டி முடிவடைந்த பின் ஜோகோவிச் தெரிவித்தார்.
32 வயதான ஜோகோவிச் இதுவரை (2009, 2010, 2011, 2013) நான்கு முறை துபாய் சாம்பியன்ஷிப் தொடரை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிறுவர்களுடன் தெருவில் டென்னிஸ் விளையாடிய ஜோகோவிச்!