ஆண்கள் டென்னிஸ் சீசன் இறுதிப் போட்டி நவம்பர் 15 முதல் 22 வரை லண்டனில் நடைபெற உள்ளது. இதில், முதல் எட்டு ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு வீரர்களின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
33 வயதான ஜோகோவிச், ஆறு முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைக்க முயற்சிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. உலக தரவரிசைப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள ரஷ்யாவின் மெட்வெடேவ், ஏழாவது இடத்தில் உள்ள ஜெர்மனியின் ஸ்வெரெவ் மற்றும் அர்ஜென்டினாவைச் சேர்ந்த அறிமுக வீரர் ஸ்வார்ட்ஸ்மேன் ஆகியோரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற வேண்டும்.
சுவிஸ் மேஸ்ட்ரோ ரோஜர் பெடரர் முழங்கால் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளை தவிர்க்க முடிவு செய்துள்ளார். இதன்காரணமாக, ஏடிபி தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் உள்ள ஸ்வார்ட்ஸ்மேன், லண்டனின் O2 அரங்கில் பங்கேற்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார்.
1970ஆம் ஆண்டில் டோக்கியோவில் முதன்முதலில் நடைபெற்ற ஏடிபி பைனலின் 50ஆவது ஆண்டுவிழா இதுவாகும். அடுத்தாண்டு, இந்தத் தொடர் இத்தாலியின் டுரின் நகரில் நடைபெறுகிறது.