இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனையாக திகழ்பவர் சானியா மிர்சா. கடந்த சில ஆண்டுகளாக இவர் மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் மட்டுமே பங்கேற்றுவருகிறார். குழந்தை பெற்றபின் இரண்டு ஆண்டுகளாக டென்னிஸ் விளையாடாமல் இருந்த இவர், சமீபத்தில் நடைபெற்ற ஹோபார்ட் இன்டர்நேஷனஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று கம்பேக் தந்தார்.
இதைத்தொடர்ந்து, நடைபெற்றுவரும் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் இவர் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணாவுடன் விளையாடவிருந்தார். இதனால், இவரது ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில், சானியா மிர்சாவின் பின்னங்காலில் காயம் ஏற்பட்டதால் அவர் இந்தத் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவிலிருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டது.
"எதிர்பாராவிதமாக எனக்கு ஏற்பட்ட காயத்தால் கலப்பு இரட்டையர் பிரிவில் போபபண்ணாவுடன் ஜோடி சேர்ந்து விளையாடும் வாய்ப்பை இழப்பது மிகவும் கஷ்டமாக உள்ளது" என சானியா மிர்சா தெரிவித்தார்.
இருப்பினும் அவர் உக்ரைன் நாட்டின் நடியா கிச்னோக்குடன் இணைந்து மகளிர் இரட்டையர் பிரிவில் பங்கேற்கவுள்ளார். இந்த இணை நாளை நடைபெறும் தங்களது முதல் போட்டியில் சீனாவின் ஸின்யூன் ஹன் - லின் ஸூ இணையுடன் மோதவுள்ளது. 33 வயதான சானியா மிர்சா 2009இல் கலப்பு இரட்டையர் பிரிவிலும், 2016இல் மகளிர் இரட்டையர் பிரிவிலும் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 0-3 என்ற நிலையிலிருந்து 7-5 என மாறிய மூன்றாவது செட்; ரசிகர்களை அசரடித்த கோகோ!