உலக அளவில் புகழ் பெற்ற டென்னிஸ் தொடர்களான ஏடிபி, டபில்யூடிஏ தொடர்களை வேறு இடங்களில் மாற்றம் செய்து விளையாடுவதற்கு பதிலாக அனைத்தையும் கைவிடுவதாக சீனாவின் விளையாட்டு நிர்வாக அமைப்பு அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் எஞ்சியுள்ள நாள்களில் கரோனா அச்சம் காரணமாக எந்த விதமான விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டபில்யூடிஏ தலைவர் ஸ்டீவ் சைமன் கூறியதாவது:
உலகப் புகழ் பெற்ற விளையாட்டுத் தொடர்களை இந்த ஆண்டு சீனாவில் நடைபெறாமல் இருப்பது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. இருப்பினும் அந்நாட்டின் இந்த முடிவை மதிக்கிறோம். அடுத்த சீசனில் இப்போட்டிகளை எதிர்நோக்கி ஆவலாக உள்ளோம் என்றார். இதேபோல் ஏடிபி நிறுவனத் தலைவர் ஆண்ட்ரியா கவுடென்ஸியும் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
இந்த அச்சுறுத்தும் சூழலில் விளையாட்டு தொடர்களை அந்தந்த பகுதியின் உள்ளூர் வழிகாட்டுதல்களையே பின்பற்றி வருகிறோம். எதிர்பாராத விதமாக நிகழ்ந்திருக்கும் இந்த சர்வதேச அச்சுறுத்தலால் தங்கள் நாட்டின் நலன் கருதி சீன அரசாங்கத்தின் இந்த முடிவை மதிக்கிறோம். கனத்த இதயத்துடன் ஏடிபி தொடர் இந்த ஆண்டு சீனாவில் நடைபெறாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம் என்றார்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2020: முன்னேற்பாடு பணிகளில் தீவிரம் காட்டும் பிசிசிஐ