டோக்கியோ (ஜப்பான்): கரோனா தொற்று காரணமாக கடந்தாண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், ஒலிம்பிக் போட்டி நாளை (ஜூலை 23) தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
உலகம் முழுவதும் 11 ஆயிரம் தடகள வீரர்கள், பல்வேறு விளையாட்டு வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.
கரோனா தொற்று முடிவுகள்
இந்நிலையில், நேற்று நடைபெற்ற கரோனா பரிசோதனையில் (Health Report App) இந்திய வீரர்களுக்கு கரோனா தொற்று இருப்பதாக சுகாதார அறிக்கை முடிவு வெளியானது.
இதனையடுத்து இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பாத்ரா விளக்கமளிக்க கோரி இந்திய அணியின் துணை பொறுப்பாளர் பிரேம் வர்மாவிடம் கேட்டுக்கொண்டார்.
கரோனா பாதிப்பு இல்லை
இது குறித்து பிரேம் வர்மா கூறியதாவது "யாருக்கும் கரோனா அறிகுறிகள் இல்லை. கரோனா பரிசோதனையின் போது ஏற்பட்ட கவனக்குறைவின் காரணமாக தவறான முடிவுகள் காட்டப்பட்டுள்ளன".
"எடுத்துக்காட்டாக, நீங்கள் உங்கள் வெப்பநிலையை 38 செல்சியஸ் என பதிவு செய்தால், சி.எல்.ஓ தொற்று கட்டுப்பாட்டு மென்பொருளால் எச்சரிக்கப்படும். இது குறித்து சி.எல்.ஒ-விற்கு ஒரு மின் அஞ்சல் செல்லும்".
"பின்னர், இது சரிபார்க்கப்படும். இத்தகைய தவறுகளே இங்கு நடைபெற்றுள்ளது. இந்திய வீரர்கள் யாருக்கும் கரோனா தொற்று இல்லை" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக்: இதுவரை 58 பேருக்கு கரோனா தொற்று