உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் கத்தார் தலைநகர் தோஹாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த தொடரில் பல்வேறு பிரிவுகளிலும் தடகள போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் இரண்டாம் நாளான நேற்று ஆண்கள் 100 மீ ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.
இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் கோல்மேன், பந்தய தூரத்தை வெறும் 9.76 விநாடியில் கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். அவருக்கு அடுத்தபடியாக நடப்பு உலக சாம்பியனான அமெரிக்க வீரர் ஜஸ்டின் கேட்லின் 9.89 விநாடிகளில் வந்ததால் தனது சாம்பியன் மகுடத்தை இழந்து வெள்ளியை தமதாக்கினார். மூன்றாவது இடத்தை பிடித்த கனடா வீரர் ஆண்ட்ரே டி கிராஸிக்கு (9.90 விநாடி) வெண்கலம் கிடைத்தது.
நேற்றைய 100 மீ ஓட்டத்தில் கிறிஸ்டியன் கோல்மேன் 9.76 விநாடிகளில் ஓடியதே நடப்பாண்டில் நிகழ்த்தப்பட்ட வேகமான சாதனையாகும். இதுவரை நடைபெற்ற 100 மீ ஓட்டங்களில் வேகமாக முடிக்கப்பட்ட ஆறாவது சாதனையும் இதுதான். ஜமாய்க்காவின் புயல் உசேன் போல்ட் 9.58 விநாடிகளில் ஓடியதே உலக சாதனையாக இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கிறிஸ்டியன் கோல்மேன் மூன்று முறை ஊக்கமருந்து சோதனையில் பங்கு பெறாத காரணத்துக்காக அவருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. இதனால் அவர் உலக சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டது. பின்னர் தேதியின் அடிப்படையை காரணமாகக் கொண்டு அவரது தடை நீக்கப்பட்டது.