உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் தோஹாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வீரர் வீராங்கனைகள் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவார்கள். அந்த வகையில், நேற்று நடைபெற்ற மகளிர் 100 மீ பிரிவு ஓட்டப்பந்தயப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை டூட்டி சந்த் பந்தய இலக்கை 11.48 விநாடிகளில் கடந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
இதையும் படிங்க: #WorldAthleticsChamps: ஏமாற்றிய டூட்டி சந்த்!
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற கலப்பு 4*400 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியின் இரண்டாவது சுற்றில், முகமது அனாஸ், வி.கே. விஸ்மாயா, ஜிஸ்னா மேத்யூவ், நிர்மல் ஆகியோர் அடங்கிய இந்திய அணி பங்கேற்றது. பந்தய இலக்கை இந்த அணி 3 நிமிடம் 16 நொடி, 14 மணித்துளிகளில் (3:16.14) கடந்து மூன்றாவது இடத்தைப் பிடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
இதன்மூலம், அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கலப்பு 4 *400 தொடர் ஓட்டப்பந்தய பிரிவில் பங்கேற்கும் வாய்ப்பை இந்திய அணி பெற்றுள்ளது. இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் இந்த அணி பதக்கம் வெல்லுமா என்கிற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.