கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பியூச்சர் கபடி ஹீரோஸ் (Future Kabaddi Heroes) என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கபடி போட்டியில் சாதிக்கத் துடிக்கும் இளம் வீரர்களை கண்டறிவதே இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாகும்.
கடந்தாண்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றதில் 85 வீரர்கள் புரோ கபடி லீக் ஏலத்தில் விடுவதற்காக தேர்வாகினர்.
அதில் 19 வயது வீரர் நவீன் குமார் தபாங் டெல்லி அணிக்காக ஒப்பந்தமானார். கடந்த புரோ கபடி லீக் சீசனில் டாப் 10 ரைடர் களின் பட்டியலில் இடம்பிடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
தனது முதல் சீசனிலேயே இவரது சிறப்பான ஆட்டத்தால் தபாங் டெல்லி அணி இறுதி சுற்று வரை முன்னேறியது.
அந்த நிகழ்ச்சி குறித்து புரோ கபடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடிய அவர், " என்னை போன்ற இளம் வீரர்களுக்கு அடுத்த கட்டத்துக்கு முன்னேற அந்த நிகழ்ச்சி பெரிதாக உதவியது. இந்த வாய்ப்புகளை வழங்கிய மஷால் ஸ்போர்ட்ஸின் சிறப்பான முயற்சியாகும்.
அவர்கள் ஒடிசாவில் நடைபெற்ற ஜூனியர் நேஷன்களைப் பார்க்க வந்திருந்தனர். அப்போது எனது ஆட்டத்தைக் கண்டு புரோ கபடி லீக்கின் ஒரு பகுதியாக இருக்க எனக்கு வாய்ப்பளித்து பயிற்சி முகாமில் சேர எனக்கு அழைப்பு விடுத்தனர்" என்றார்.
பின்னர் கபடி போட்டியில் சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு நவீன், "நீங்கள் இளமையாக இருக்கும்போது, உணர்ச்சிபூர்வமாக இருப்பீர்கள். உங்களிடம் நல்ல நெகிழ்வுத்தன்மை, சகிப்புத்தன்மை வேகம் இருக்கும். எனவே உங்களை மேம்படுத்துவதற்கு நீங்கள் தொடர்ந்து கடுமையாக பயிற்சி பெற வேண்டும்.
நீங்கள் மூத்த வீரர்களுடன் விளையாடும்போது ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. உங்கள் வேகம், எடைப் பயிற்சியில் சிறப்பாகச் செயல்பட நீங்கள் சமமாக உழைப்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக எந்த இடைவெளியும் இல்லாமல் பயிற்சி எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த சீசனில் இறுதிப்போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணியுடன் தோல்வி அடைந்தது குறித்து நவீன்குமார் கூறுகையில், "நாங்கள் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த பிறகு நான் மிகவும் வருத்தமாக இருந்தேன்,அணி வீரர்களும் சோகமாத்தான் இருந்தனர். ஆனால் பயிற்சியாளர் தான் எங்களை ஊக்கப்படுத்தினார்.
தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது எங்களுக்கு மிகவும் ஏமாற்றமாகவே இருந்தது.இந்தத் தோல்வி அடுத்த சீசனில் சிறப்பாக விளையாட எங்களை பெரிதாக ஊக்கப்படுத்தும். புரோ கபடி லீக் தொடரை வெல்ல வேண்டும் என்பதுதான் எங்களது இலக்கு. அந்த இலக்கை அடைய எத்தனை வருடங்கள் ஆனாலும் நாங்கள் ஓயமாட்டோம்" என்றார் நம்பிக்கையுடன்.