இந்திய அரசால் விளையாட்டுத் துறையில் சாதனைப் படைத்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது, ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், 2020ஆம் ஆண்டுக்கான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதினை, இளம் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு வழங்க, இந்திய மல்யுத்த கூட்டமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
25 வயதான வினேஷ் போகத், கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், காயம் காரணமாக அரையிறுதிச் சுற்றோடு வெளியேறி, பதக்கம் வெல்லும் வாய்ப்பைத் தவறவிட்டார். இருப்பினும், இவருக்கு அதே ஆண்டு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.
மேலும் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் மல்யுத்தப் பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். மேலும் வினேஷ் தற்போது உலக மல்யுத்த தரவரிசைப் பட்டியலில் மூன்றாமிடம் பிடித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஆண்டும் வினேஷ் போகத்தை ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய மல்யுத்த கூட்டமைப்பு பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.