2004ஆம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் ஆடவர் டபுள் டிராப் (double drop) பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர். அதேபோல் இந்தியா சார்பாக துப்பாக்கிச் சுடுதலில் பதக்கம் வென்ற முதல் வீரரும் இவரே. இதையடுத்து 2008ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் அபினவ் பிந்த்ரா தங்கப்பதக்கம் வென்றார்.
இந்நிலையில் 16 ஆண்டுகளுக்கு முன்பாக வெள்ளிப்பதக்கம் வென்ற அனுபவத்தை ராஜ்யவர்தன் சிங் பகிர்ந்துள்ளார். அதில், "2004ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடரில் பதக்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் பற்றி மக்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகவே இருந்தன.
ஒலிம்பிக் போட்டிகளுக்கான தேதிகள் நெருங்கும்போது நான் எனது பயிற்சியை மிகவும் சிரத்தையுடன் மேற்கொண்டேன்.
ஒலிம்பிக் போட்டியின்போது முதல் இரண்டு சுற்றுகளில் நான் பெரிதாகச் சோபிக்கவில்லை. 13ஆவது இடத்தில்தான் இருந்தேன். அதையடுத்து நடந்த மூன்றாவது சுற்றில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறினேன்.
பின்னர் இறுதிச்சுற்றின் முதல் இரண்டு முறை சுட்டபோதே எனக்கு வெள்ளிப்பதக்கம் உறுதியானது. இறுதியாக 179 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றேன்'' என்றார்.