கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த உலகின் பல்வேறு நாடுகளும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இப்பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக சர்வதேச விமானப் போக்குவரத்துகளும் தடை செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு முன் ஜெர்மனியில் நடைபெற இருந்த சதுரங்க தொடரில் கலந்துகொள்ள, இந்தியாவின் நட்சத்திர சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த் சென்றிருந்தார். இதற்கிடையே, கரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து முற்றிலுமாக தடைசெய்யப்பட்டது.
இதனால், மூன்று மாதங்களாக ஜெர்மனியிலுள்ள ஃப்ராங்ஃபுர்ட் நகரில் ஆனந்த் தங்கியிருந்தார். மேலும், இணையத்தில் நடந்த சதுரங்கப் போட்டிக்கு வர்ணனையும் செய்து வந்த இவர், இம்மாதத்தில் நடைபெற்ற ஒரு இணைய வழி சதுரங்க போட்டியில் இந்திய அணியையும் வழி நடத்தினார்.
இந்நிலையில், தற்போது விமானப் போக்குவரத்திற்கான தடைகள் தளர்த்தப்பட்டதால், ஜெர்மனியிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் நேற்று (மே 30) பெங்களூரு விமான நிலையம் வந்தடைந்தார்.
இது குறித்து அவரது மனைவி அருணா ஆனந்த் கூறுகையில், "விஸ்வநாதன் ஆனந்த் பத்திரமாக நாடு திரும்பியுள்ளார். அவர் பெங்களூருவில் உள்ளதால், கர்நாடக அரசின் அறிவுறுத்தலின்படி 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே சென்னை திரும்புவார்' என தெரிவித்தார்.