மலப்புரம்: கேரள மாநிலத்தில் பெரும்பாலான திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாறு திருவிழாகளில் கலந்து கொள்ளும் யானைகள் அதிக கூட்டத்தை பார்க்கும் போது மிரண்டு, திடீரென ஆக்ரோஷமடைந்து மனிதர்களை தாக்குவது, யானைகளுக்குள் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளுவது என சமீப காலமாக அதிகளவில் இது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இதற்கு கேரள உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து, திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்துவதில் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் இன்று (ஜனவரி 8) புதன்கிழமை மீண்டும் மலப்புரம் அருகே உள்ள திரூர் புதியங்காடியில் இருக்கும் பிபி அங்காடி ஜராம் மைதானத்தில் நடந்த திருவிழாவில் 5க்கும் மேற்பட்ட யானைகள் வரிசையாக நிற்கவைக்கப்பட்டிருந்தன.
இதையும் படிங்க: அசாம் சுரங்க விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் உடல் மீட்பு...மேலும் 8 பேரை மீட்கும் பணி தொடர்கிறது!
இந்த திருவிழாவானது அதிகாலை 12.30மணிக்கு தொடங்கப்பட்ட நிலையில் அதிகாலை 2.15 மணி போல் திடீரென ஆக்ரோசமடைந்து பாக்கத் ஸ்ரீகுட்டன் என்ற யானை வரிசையை விட்டு விலகி, பாகனுடன் கூட்டத்திற்குள் புகுந்தது. இதனால் மக்கள் அலறி அடித்து ஓட தொடங்கிய போது நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலால் பயந்து போன யானை அருகில் இருந்த ஒருவரை தன் தும்பிக்கையால் இழுத்து, சுழற்றி, தூக்கி கீழே எறிந்தது.
இந்த சம்பவத்தில் 17 பேர் படுகாயமடைந்த நிலையில் கோட்டக்கல்லில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.