கூடைப்பந்து விளையாட்டின் ஜாம்பவான் வீரரான கோப் ப்ரைன்ட், அவரது மகள் ஜியானா உள்ளிட்ட ஒன்பது பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். இது உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. கோப் ப்ரைன்ட்டிற்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
தற்போது கோப் ப்ரைன்ட்டின் மனைவி வனேஸா ப்ரைன்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு ஒரு உருக்கமான கடிதத்தைப் பகிர்த்துள்ளார். அதில், ''எங்களது கடினமான சூழலில் எங்களுடன் இருந்த கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம். உங்களது பிரார்த்தனைகள்தான் எங்களுக்குத் தற்போது தேவை. திடீரென எனது கணவர் கோப் ப்ரைன்ட், மகள் ஜியானா ஆகிய இருவரும் இல்லை என்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களுடன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தச் சூழலில் எங்களின் வலியைக் கூறுவதற்கு வார்த்தைகள் இல்லை. கோப், ஜியானா ஆகியோருக்கு இடையே மிகச்சிறந்த அன்பு இருந்தது. எங்களின் வாழ்வில் அவர்கள் இருந்தது, ஆசிர்வதிக்கப்பட்டதாகக் கருதுகிறேன். அவர்கள் எப்போதும் எங்களுடன் தான் இருக்கவேண்டும் என விரும்புகிறேன். எங்களிடமிருந்து வேகமாகப் பறிக்கப்பட்ட ஆசீர்வாதங்கள் அவர்கள்'' எனப் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையெ சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'சிறு வயதில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன்'