நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில், 32ஆவது கோடைக்கால ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருக்கும் இந்த ஒலிம்பிக் போட்டி தொடங்க இன்னும் எட்டு மாதங்கள் மட்டுமே உள்ளது. இந்நிலையில், இந்த ஒலிம்பிக் போட்டிக்காக டோக்கியோவில் புதிதாகக் கட்டப்பட்ட மைதானம் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே (Shinzo abe) டோக்கியோ ஆளுநர் யூரிகோ கொய்கே (Yuriko Koike) ஆகியோர் பங்கேற்றனர்.
சுமார் 60 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் இந்த மைதானம் கட்டப்பட்டது. புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் கெங்கோ குமா, ஜப்பான் நாட்டின் பாரம்பரிய முறையில் இந்த மைதானத்தை வடிவமைத்தார். இந்த மைதானத்தின் பெரும்பாலான பகுதிகள் மரக்கட்டைகளால் கட்டப்பட்டது. இந்த ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவும் நிறைவு விழா நிகழ்ச்சிகளும் இந்த மைதானத்தில் தான் நடக்கவுள்ளன. இந்த மைதானத்தில் முதல் போட்டியாக எம்பரர் கோப்பை ஜேஎஃப்ஏ 99ஆவது ஜப்பான் கால்பந்து சாம்பியன்ஷிப் வருகிற 2020ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி நடத்தப்படுகிறது.
இதையும் படிங்க: ஹைதராபாத் அணியில் மிட்சல் ஸ்டார்க்? டேவிட் வார்னர் பதிவால் குழப்பமடைந்த ரசிகர்கள்!