இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்த பின், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பயிற்சி மையங்கள் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்தப் பயிற்சியின்போது மத்திய அரசு வழிக்காட்டுதல்களை பின்பற்ற வேண்டும் எனக் கூறியது.
இந்நிலையில், இந்தியாவின் நட்சத்திர தடகள வீராங்கனையாக அறியப்படுபவர் டூட்டி சந்த். தற்போது மத்திய அரசு நான்காம் கட்ட ஊரடங்கில் கொண்டு வந்த தளர்வு காரணமாக, இரண்டு மாத இடைவெளிக்கு பின், புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் தனது பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
இது குறித்து பேசிய சந்த், 'மைதானங்களில் பயிற்சி எடுக்க அனுமதியளித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதுநாள் அவரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக எனது உடற்தகுதி மிகுந்த பாதிப்படைந்துள்ளது. தற்போது நான் எனது உடற்தகுதியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். மேலும் என்னுடன் இப்போது வேறு எந்த வீரர்களும், பயிற்சியாளர்களும் இல்லை.
மேலும், இந்திய விளையாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள பாதுகாப்பு நெறிமுறைகள் படி, வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் என அனைவரும் தகுந்த இடைவெளியை கடைபிடிப்பது ஒன்று மட்டுமே நாம் கரோனாவிலிருந்து தப்பிக்க ஒரே வழி. மேலும் டிசம்பர் மாதம் வரையிலும் பெரிய அளவிலான போட்டிகள் ஏதுமில்லாததால், இந்த வாய்ப்பை பயன்படுத்தி எங்களது திறனை வளர்த்துக்கொள்ள உதவும்.
அதேபோல் ஊரடங்கு முடிந்து நான் தற்போது பயிற்சியை மேற்கொள்வது எனக்கு மிகுந்த சிரமத்தையளிக்கிறது. எனது திறமையை மீண்டும் புதுப்பிக்க நான் கடுமையாக முயற்சி செய்வேன்' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:‘தி எண்ட் ஆஃப் எரா’ ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் மறைவு!