டோக்கியோ: பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆக.22ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. ஆடவர் இரட்டையர் பிரிவில் காலிறுதிப் போட்டிகள் இன்று (ஆக. 26) நடைபெற்றன.
இதன் ஒரு போட்டியில், இந்தியாவின் சிராக் ஷெட்டி - சாத்விக்சாய்ராஜ் ஜோடி, உலகின் இரண்டாம் நிலை ஜோடியான ஜப்பானின் கோபயாஷி - ஹோக்கி உடன் மோதியது. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட்டை இந்திய ஜோடி 24-22 என்ற செட் கணக்கில் மிகவும் போராடி வென்றது. முதல் செட்டை வென்று முன்னிலை பெற்ற இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 15-21 என்ற கணக்கில் இழந்தது.
இதனால், 1-1 என்ற செட் கணக்கில் சமன் செய்த ஜப்பான் ஜோடி, மூன்றாவது செட்டையும் வெல்லும் முனைப்பில் இருந்தது. ஆனால், சுதாரித்துக்கொண்ட இந்திய ஜோடி 21-14 என்ற கணக்கில் வென்று, அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டி ஒரு மணிநேரம் 15 நிமிடங்கள் வரை நீடித்தது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம், உலக சாம்பியன்ஷிப் தொடரில், முதன்முறையாக ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியா பதக்கத்தை உறுதி செய்துள்ளது. இதற்கு முன், 2011ஆம் ஆண்டு மகளிர் இரட்டையர் பிரிவில்தான் ஜூவ்லா கட்டா, அஸ்வினி பொன்னப்பா ஆகியோர் வெண்கலம் வென்றிருந்தனர்.
உலகின் 7ஆம் நிலை வீரரான சிராக் ஷெட்டி - சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி ஜோடி, நடந்த முடிந்த காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணி அறிவிப்பு