மாஸ்கோ: சோவியத் யூனியன் 1991ஆம் ஆண்டு ஆர்மீனியா, அஜர்பைஜான், பெலாரஸ், எஸ்டோனியா, ஜார்ஜியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், லாட்வியா, லிதுவேனியா, மால்டோவா, ரஷ்யா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உக்ரைன், உஸ்பெகிஸ்தான் என 15 நாடுகளாக பிரிந்தன. இதற்கு முன்னதாக ரஷ்ய பேரரசின் ஒரு பகுதியாக உக்ரைன் இருந்தது. அதன்காரணமாக ரஷ்யா, உக்ரைன் நாட்டின் எல்லைகளில் ஊடுருவி பல்வேறு பகுதிகளை ஆக்கிரமித்துவருகிறது.
உக்ரைனும் இழந்த பகுதிகளை மீட்க பதிலடிகொடுத்துவருகிறது. இப்படி இரு நாடுகளுக்கும் இடையே 2014ஆம் ஆண்டு முதல் போர் சூழல் நிலவி வந்தது. இந்த நிலையில் நேற்று(பிப்.24) போர் வெடித்துள்ளது. ரஷ்ய ராணுவப்படையால் உக்ரைனில் வான்வழி, தரைவழி என்று தாக்குதல்கள் நடத்தப்பட்டுவருகின்றன. உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. இந்தபோர் காரணமாக 2022ஆம் ஆண்டுக்கான ரஷ்ய கிராண்ட் பிரிக்ஸ் ஃபார்முலா ஒன் கார் பந்தயம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரஷ்ய கிராண்ட் பிரிக்ஸ் என்பது ஃபார்முலா ஒன் உலக சாம்பியன்ஷிப் கார் பந்தயமாகும். ரஷ்யா நாட்டில் உள்ள சோச்சியில் ஆண்டுதோறும் நடைபெறும். இந்த பந்தயம் முதன்முதலில் 1913ஆம் ஆண்டு ரஷ்ய பேரரசின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்றது. 2021ஆம் ஆண்டு பார்முலா 1 கார் பந்தயத்தில் 8ஆவது முறையாக லூயிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இதையும் படிங்க: ரஷ்யாவின் 5 விமானங்கள், 1 ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது; உக்ரைன்