கடந்த சில மாதங்களாக ரஷ்ய விளையாட்டு அமைப்பு மீதான ஊக்க மருந்து புகார் பூதாகரமாக வெடித்து வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் ஊக்க மருந்து பயன்படுத்திய வீரர்களின் பட்டியலை ரஷ்யா அழித்து விட்டதாகவும் தகவல்கள் பரவத் தொடங்கின.
இந்நிலையில் இது குறித்து தீவிர விசாரணையை மேற்கொண்ட உலக ஊக்க மருந்து தடுப்புப் பிரிவு, ரஷ்யாவின் ஊக்க மருந்து குறித்த அனைத்து குற்ற ஆதாரங்களுடனும் இன்று கூடியது.
இந்தக் கூட்டத்தில் ரஷ்ய விளையாட்டு வீரர்கள் ஊக்க மருந்து உட்கொண்டது, ரஷ்ய விளையாட்டு அமைச்சகம் ஊக்க மருந்து உபயோகித்தவர்களின் பட்டியலை அழித்தது ஆகிய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன. இதனால் உலக ஊக்க மருந்து தடுப்புப் பிரிவு ரஷ்யாவை அனைத்து விதமான விளையாட்டுப் போட்டிகளில் இருந்து நான்கு ஆண்டுகளுக்குத் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த உத்தரவில், ரஷ்யாவின் தேசியக் கொடியானது எந்த ஒரு விளையாட்டு நிகழ்ச்சிகளிலும் இடம்பெறக் கூடாது எனவும், குறிப்பாக 2020 டோக்கியோ ஒலிம்பிக், 2022 உலகக்கோப்பை கால்பந்துத் தொடரின் போது, ரஷ்யாவின் தேசிய கீதம் மற்றும் தேசிய கொடி ஏற்ற அனுமதிக்கக் கூடாது எனவும் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மேலும், ரஷ்ய வீரர்கள் தங்கள் மீதான குற்றங்களை பொய்யானது என நிரூபிக்கும் பட்சத்தில்; அவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். ஆனால், அவர்கள் ரஷ்யாவின் தேசியக் கொடியைப் பயன்படுத்தாமல், பொதுவான சமாதான கொடியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்துள்ளது.
உலகின் வல்லரசு நாடான ரஷ்யா இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு, அனைத்துவிதமான விளையாட்டுப்போட்டிகளில் இருந்தும் தடை செய்யப்பட்டுள்ள சம்பவம் உலக மக்களிடையே பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மீண்டும் இங்கிலாந்து அணிக்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் நட்சத்திரங்கள்