ப்ரோ கபடி தொடரின் லீக் ஆட்டங்கள் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த 56ஆவது லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி, பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய பெங்களூரு அணி முதல் இரு நிமிடங்களிலேயே ஐந்து புள்ளிகள் எடுத்து அசத்தியது.
டெல்லி அணி இதற்குப் பதிலடி தர முயன்றபோதும் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் பவன் செஹ்ராவத்தின் சிறப்பான ஆட்டத்தால் பெங்களூரு தொடர்ந்து முன்னிலையிலேயே இருந்தது. முதல் பாதி முடிவில் பெங்களூரு அணி 19-11 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியின் முதல் பத்து நிமிடங்கள் வரை இதே நிலை தொடர்ந்தது. பின் டெல்லி அணி வீரர் நவீன் குமார் வழக்கம் போல அதிரடி காட்ட புள்ளிகள் வித்தியாசம் குறைந்துகொண்டே வந்து, ஒரு கட்டத்தில் 30-27 என்ற புள்ளிகள் கணக்கில் டெல்லி முன்னிலை வகித்தது. பின்னர் பவன் செஹ்ராவத்தும், நவீன் குமாரும் மாறி மாறி ரெய்ட் செய்ய ஆட்டம் பரபரப்பானது.
ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் ரெய்ட் செய்த பவன் செஹ்ராவத்தை, டெல்லி கேப்டன் ரவிந்தர் பேஹல் மடக்கிப் பிடிக்க, பரபரப்பாகச் சென்ற ஆட்டத்தில், திருப்புமுனையாக அமைந்து 31-33 என்ற புள்ளிகள் கணக்கில் டெல்லி அணி பெங்களூருவை வீழ்த்தியது.
பின்னர் நடைபெற்ற 57ஆவது லீக் பேட்டியில் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ் மோதின. முழுக்க முழுக்க டிபன்டர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட இந்த போட்டியில் முதல் பாதியில் 14-11 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெய்பூர் முன்னிலையிலிருந்தது. இரண்டாம் பாதியில் தெலுங்கு டைட்டன்ஸ் வீரர் விஷால் பரத்வாஜ் அட்டகாசமாக டிபன்டிங் செய்ய ஜெய்பூர் அணி புள்ளிகள் எடுக்க முடியாமல் தடுமாறியது.
ஆட்டத்தின் இறுதி இரு நிமிடங்களும் தெலுங்கு டைட்டன்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலிருந்த தெலுங்கு டைட்டன்ஸ் 24-21 என்ற புள்ளிகள் கணக்கில் முதலிடத்தில் ஜெய்பூரை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது.