கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ப்ரோ கபடி லீக், ஐபிஎல்க்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய விளையாட்டுத் தொடராகும். இதில் 2017ஆம் ஆண்டு அறிமுகமான தமிழ் தலைவாஸ் அணிக்கு முதல் இரண்டு சீசன்களும் மறக்க வேண்டிய ஒன்றாகும். இரு சீசன்களிலும் இறுதி இடத்தில் முடித்த தமிழ் தலைவாஸ் அணி, இம்முறை பல மாற்றங்களுடன் களமிறங்கியது.
அஜய் தாக்கூருக்கு பின் இரண்டாவது ரைடர் ஒழுங்காக அமையாததால் பல ஆட்டங்களில் தோல்வியைத் தழுவியது. இதைச் சரி செய்யக் கடந்தமுறை நடைபெற்ற ஏலத்தில் தெலுங்கு டைட்டன்ஸில் விளையாடிய ராகுல் சௌத்திரியை வாங்கினார்கள். இந்நிலையில் இன்று ப்ரோ கபடி லீக்கின் நான்காவது லீக் போட்டியில் இன்று தமிழ் தலைவாஸ் அணியும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளும் மோதினர்.
ஆரம்பத்தின் முதன் 10 நிமிடங்களில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் பெற்று வந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு நிலவியது. ஆட்டத்தின் 11ஆவது நிமிடத்தில் தமிழ் தலைவாஸின் சபீர் பாப்பு எடுத்த இரு புள்ளிகள் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. பின்னர் புள்ளிகள் கணக்கை வேகமாக அதிகரித்த தமிழ் தலைவாஸ் ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் 20-10 என்று முன்னிலை வகித்தனர்.
இரண்டாவது பாதியிலும் அஜய் தாக்கூரும் ராகுல் சௌத்தியும் தங்களது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தால் தமிழ் தலைவாஸின் புள்ளிகள் தொடர்ந்து உயர்ந்தது. கடந்த சீசனில் அட்டகாசமாக விளையாடிய சித்தார்த் தேசாய், இந்த சீசனில் இதுவரை சோபிக்காமல் போனது தெலுங்கு டைட்டன்ஸ்க்கு பெரிய இழப்பைக் கொடுத்தது.
ஆட்ட நேர முடிவில் 39-26 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது. அதிகபட்சமாகத் தமிழ் தலைவாஸின் ராகுல் சௌத்திரி 12 புள்ளிகளையும், மஞ்சித் சில்லர் தெலுங்கு டைட்டன்ஸின் சித்தாத் தேசாய் 6 புள்ளிகளையும் எடுத்தனர்.