விளையாட்டு ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த 32ஆவது கோடைக்கால ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9வரை நடைபெறயிருந்தது. ஆனால், உலகம் முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துவருவதால் இந்தத் தொடர் அடுத்தாண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஒ.சி) தெரிவித்துள்ளது.
வீரர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு ஐ.ஒ.சி. எடுத்த இந்த முடிவுக்கு பல்வேறு வீரர்களும் ஆதரவு தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், இந்த இக்கட்டான தருணத்தில் டோக்கியோ ஒலிம்பிக் தள்ளிவைக்கப்பட்டிருப்பது நல்ல முடிவு என இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "கோவிட் -19 வைரஸை மக்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்த வைரஸ் யாரை வேண்டுமானாலும் தாக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கோவிட் -19 வைரசால் சர்வேத அளவில் பல்வேறு போட்டிகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், ஒலிம்பிக் போட்டி தள்ளிவைக்கப்பட்டதும் நல்ல முடிவுதான். போட்டிகளைவிட வீரர்களின் உடல்நலம்தான் முக்கியம் என்பதால் வீரர்கள் அனைவரும் கோவிட் -19 வைரஸ் தொற்று, பெருந்தோற்று என்பதை உணர்ந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும். அதேசமயம், இந்த கோவிட் -19 வைரஸால் எங்களது பயிற்சிகளை ஏதும் பாதிக்காது" என்றார்.
இதையும் படிங்க: இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கைப் பயணம்!