அனிதா பால்துரை - தமிழ்நாடு (கூடைப்பந்தாட்டம்)
சென்னையைப் பூர்வீகமாக கொண்ட அனிதா பால்துரை, இந்திய மகளிர் கூடைப்பந்து அணியின் சிறந்த வீராங்கனை ஆவார். கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை 18 ஆண்டுகள் இந்திய கூடைப்பந்தாட்ட அணியில் விளையாடி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
ஆசிய கூடைப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஒன்பது முறை பங்கேற்ற முதல் மற்றும் ஒரே இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் அனிதா பால்துரை படைத்துள்ளார். தேசிய அளவிலான போட்டிகளில் 30க்கும் மேற்பட்ட பதக்கங்களையும் வென்றுள்ள அனிதா பால்துறை, இந்திய மகளிர் கூடைப்பந்தாட்ட அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார்.
மௌமா தாஸ் - மேற்கு வங்கம் (டேபிள் டென்னிஸ்)
இந்திய டேபிள் டென்னிஸ் அணியின் நட்சத்திர வீராங்கனையாகத் திகழ்பவர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மௌமா தாஸ். ஆஸ்திரேலியாவில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய அணி தங்கம் வெல்ல முக்கியக் காரணமாகத் திகழ்ந்தவர்.
அதே தொடரில் சக வீராங்கனை மனிக்கா பத்ராவுடன் இணைந்து மகளிர் இரட்டையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியிலும் வெள்ளிப் பதக்கததைக் கைப்பற்றினார். கடந்த 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக், கடந்த 2016 ரியோ ஒலிம்பிக் தொடர்களில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ளார்.
அதேபோன்று கடந்த 2013ஆம் ஆண்டு விளையாட்டு துறையில் சிறந்து விளங்கியதற்காக, அர்ஜுனா விருதையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்ஷு ஜாம்சென்பா - அருணாச்சலப் பிரதேசம் (மலையேற்றம்)
அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த மலையேறுபவர் அன்ஷு ஜாம்சென்பா. இவர் எவரெஸ்ட் சிகரத்தை ஐந்துமுறை ஏறி சாதனை படைத்துள்ளார். அதிலும், கடந்த 2011ஆம் ஆண்டு, ஐந்து நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை எவரெஸ்ட் சிகரத்தை தொட்டும் சாதனை படைத்துள்ளார்.
இதன் காரணமாக லிம்கா உலக சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய சாகச (அட்வென்ட்சர்) விருதான டென்சிங் நோர்கே தேசிய சாகச விருதையும் பெற்றார்.
ஓ.எம். நம்பியார் - கேரளா (தடகள பயிற்சியாளர்)
சர்வதேச தடகள போட்டிகளில் இந்தியாவிற்காக, 33 தங்கப் பதங்கங்களை வென்ற பி.டி. உஷா பயிற்சியாளர் கேரளாவைச் சேர்ந்த ஓ.எம். நம்பியார். இந்தியாவின் சிறந்த தடகள வீராங்கனையை உருவாக்கியதற்காக, ஓ.எம்.நம்பியாருக்கு கடந்த 1981ஆம் ஆண்டு மத்திய அரசால் விளையாட்டு துறையில் சிறந்த பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் துரோணாச்சாரியார் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
சுதா சிங் - உத்தர பிரதேசம் (தடகளம்)
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை சுதா சிங். இவர், 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீப்பிள்சேஸ் (தடைகளுடன் கூடிய ஓட்ட பந்தயம்) தேசிய சாதனையைப் படைத்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு குவாங்சோ ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கப் பதக்கமும், கடந்த 2018ஆம் ஆண்டு ஜகார்த்தா ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று நாட்டிற்கு பெருமையைத் தேடித்தந்தார்.
இதேபோன்று கடந்த 2017ஆம் ஆண்டு ஆசிய சாம்பியஷிப் தடகள போட்டிகளில் தங்கப்பதக்கமும், 2011, 2013, 2019 ஆகிய ஆண்டுகளில் வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளார். கடந்த 2012, 2016ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பாக பங்கேற்றார். இவரது சாதனைகளை கருத்தில் கொண்டு, கடந்த 2012ஆம் ஆண்டு மத்திய அரசு அர்ஜுனா விருதையும் வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.
விரேந்திர சிங் - ஹரியானா (மல்யுத்தம்)
ஹரியான மாநிலத்தைச் சேர்ந்த மல்யுத்த வீரர் விரேந்திர சிங். காது கேளாதோர் மல்யுத்த போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், இதுவரை மூன்று முறை தங்கப்பதக்கம் வென்று சாதனைப்படைத்துள்ளார். அதில் கடந்த 2005ஆம் ஆண்டு மெல்போர்ன் காது கேளாதோர் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் 84 கிலோ பிரிவிலும், 2013 மற்றும் 2017ஆம் ஆண்டு காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டிகளில் 74 கிலோ பிரிவிலும் தங்கம் வென்றுள்ளார்.
அதேபோல் மூன்று உலக காது கேளாதோர் மல்யுத்த சாம்பியன்ஷிப்பிலும் தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களையும் வென்றுள்ளார். இதன் காரணமாக, கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய அரசின் அர்ஜுனா விருதையும் பெற்றார்.
கே.ஒய். வெங்கடேஷ் - கர்நாடகா (பாரா ஒலிம்பிக் தடகளம்)
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாரா ஒலிம்பிக் தடகள வீரர் கே.ஒய். வெங்கடேஷ். கடந்த 1994ஆம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற சர்வதேச பாரா ஒலிம்பிக் குழுவின் முதல் உலக தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகளில், தடகளம், கூடைப்பந்து, ஹாக்கி, வாலிபால், கால்பந்து, பேட்மிண்டன் போன்ற விளையாட்டுகளில் பதக்கங்களை வென்று அசத்தினார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பன்முக செயலாற்றல் குறைபாடு ( multi-disability) உள்ளவர்களுக்கான சாம்பியன்ஷிப் தொடரின் குண்டு எறிதல் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தார். அதன் பின், கடந்த 2005ஆம் ஆண்டு நடைபெற்ற உலக உயரம் குறைந்த மனிதர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் (World Dwarf Games) பங்கேற்ற முதல் இந்தியர் எனும் சாதனையையும் படைத்தார். இதன் காரணமாக லிம்கா சாதனைப் புத்தக்கத்திலும் இடம்பிடித்து அசத்தினார்.
நிகழாண்டில் அறிவிக்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதுகள் பட்டியலில் எந்தவொரு கிரிக்கெட் வீரர்/ வீராங்கனைகளின் பெயர்கள் இடம்பெறவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது.
இதையும் படிங்க: வெ.இண்டீஸை ஒயிட்வாஷ் செய்த வங்கதேசம்!