ஜப்பானில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை ரக்பி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரில் நான்கு பிரிவுகளில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றன. இதில் குரூப் பிரிவில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் காலிறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றன. அதைத் தொடர்ந்து நடைபெற்ற காலிறுதிப்போட்டிகளின் முடிவில் நடப்பு சாம்பியனான நியூசிலாந்து, இங்கிலாந்து, வேல்ஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றன.
இதில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதின. இதுவரை நடைபெற்ற உலகக்கோப்பை தொடர்களில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற நியூசிலாந்து அணி இம்முறையும் பைனலுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அதே சமயத்தில் இங்கிலாந்து அணியும் 2007இல் நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்குப்பின் தற்போதுதான் அரையிறுதிக்குள் நுழைந்தது. எனவே இப்போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெறும் முனைப்பில் களமிறங்கியது.
ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் இங்கிலாந்து வீரர்கள் சற்று துடிப்புடன் செயல்பட்டதால் அந்த அணி முதல் பாதியின் முடிவில் 10-0 என முன்னிலை வகித்தது. 1991ஆம் ஆண்டுக்குப்பின் நியூசிலாந்து அணி உலகக்கோப்பைத் தொடரில் முதல் பாதியில் புள்ளிகள் பெறாமல் இருப்பது இதுவே முதல்முறையாகும்.
பின்னர் இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணி புள்ளிகளைப் பெற்றது. இங்கிலாந்து வீரர்களின் தடுப்பாட்டத்தை மீறி நியூசிலாந்து அணியால் ஏழு புள்ளிகளை மட்டுமே பெற முடிந்தது. இதனால் இங்கிலாந்து அணி 19-7 என்ற புள்ளிகள் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதிப் பெற்றது.
இதனால் நியூசிலாந்து அணியின் ஹாட்ரிக் உலகக்கோப்பைக் கனவை இங்கிலாந்து அணி தகர்த்துள்ளது. ரக்பி உலகக்கோப்பையின் முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டத்தை வென்ற நியூசிலாந்து அணி, மொத்தமாக இதுவரை மூன்று முறை (1991, 2011, 2015) கோப்பையை வென்றுள்ளது. அதுமட்டுமல்லாது 2007ஆம் ஆண்டுக்குப்பின் உலகக்கோப்பைத் தொடரில் தோல்வியை சந்திக்காமலிருந்த நியூசிலாந்து அணி இப்போட்டியில் முதன்முறையாக தோல்வியைத் தழுவியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணி 2007ஆம் ஆண்டுக்குப்பின் சுமார் 12 ஆண்டுகள் கழித்து உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. மேலும் இங்கிலாந்து அணி நான்காவது முறையாக தற்போது இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது. முன்னதாக 1991, 2003, 2007 ஆகிய பைனல்களில் ஆடிய இங்கிலாந்து அணி 2003இல் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் மகுடத்தைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
-
The final whistle goes and @EnglandRugby secure their place in Rugby World Cup Final after beating New Zealand 19-7#ENGvNZL #RWC2019 #WebbEllisCup pic.twitter.com/YheIOiMukW
— Rugby World Cup (@rugbyworldcup) October 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The final whistle goes and @EnglandRugby secure their place in Rugby World Cup Final after beating New Zealand 19-7#ENGvNZL #RWC2019 #WebbEllisCup pic.twitter.com/YheIOiMukW
— Rugby World Cup (@rugbyworldcup) October 26, 2019The final whistle goes and @EnglandRugby secure their place in Rugby World Cup Final after beating New Zealand 19-7#ENGvNZL #RWC2019 #WebbEllisCup pic.twitter.com/YheIOiMukW
— Rugby World Cup (@rugbyworldcup) October 26, 2019
முன்னதாக கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் ஐசிசியின் விதியால் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதால் நியூசிலாந்து அணியின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது. தற்போது அதேபோன்று நியூசிலாந்து அணியின் ரக்பி உலகக்கோப்பை ஹாட்ரிக் கனவும் தகர்க்கப்பட்டிருப்பது அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.