நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ளது. இதில், குத்துச் சண்டைக்கான தகுதிச் சுற்றுப் போட்டி சீனாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம், வெள்ளி வென்றவர்கள் நேரடியாக ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டிக்கு முன்னேறுவர். அந்த வகையில், சமீபத்தில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை மேரி கோம் வெண்கலம் மட்டுமே வென்றார்.
இந்த நிலையில், ஜூனியர் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற நிஹத் ஸரீனும் ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டியில் விளையாட தீவிரம் காட்டினார். இதனால், 51 கிலோ எடைப் பிரிவுக்கான தேர்வுப் போட்டியில் தனக்கும், மேரி கோமிற்கும் போட்டி நடத்த வேண்டும் என வலியுறுத்தி, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவுக்கு கடிதம் எழுதினார். ஆனால், மேரி கோம் ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டிக்கு அவர் நேரடியாக முன்னேறினார் என பிஎஃப்ஐ தலைவர் அஜய் சிங் அறிவித்தது, நிஹாத் ஸரீனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
இது தொடர்பாக நிஹாத் ஸரீன், மேரி கோம் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில், பிஎஃப்ஐ தரப்பிலிருந்து கிடைத்த தகவலின்படி, வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் தேர்வுப் போட்டியில் மேரி கோம் - நிஹாத் ஸரீன் இருவரும் நேருக்கு நேர் மோதவுள்ளனர். இப்போட்டியில் வெற்றிபெறும் வீராங்கனையே ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டிக்கு முன்னேறுவார்கள். இதில் எந்தவித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் 2 முதல் 21ஆம் தேதிவரை இந்தியன் பாக்ஸிங் லீக் தொடர் நடைபெறுகிறது. இந்தத் தொடர் முடிவடைந்தப் பிறகுதான் மேரி கோம் - நிஹத் ஸரீன் ஆகியோருக்கு இடையிலான போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற இந்திய ஓபன் குத்துச்சண்டை தொடரின் அரையிறுதிப் போட்டியில் நிஹாத் ஸரீன் மேரி கோமுடன் தோல்வி அடைந்தார்.
இதையும் படிங்க: ஒலிம்பிக் தகுதிச்சுற்று குத்துச்சண்டையில் இந்தியாவின் ஷிவ தாப்பா, பூஜா ராணி தங்கம்