டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி நிறைவுற்ற நிலையில், ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா ஆகஸ்ட் 9ஆம் தேதி இந்தியா திரும்பினார்.
நாடு திரும்பிய பின், நீரஜ் சோப்ராவுக்கு அரசியல் தலைவர்கள் முதல் பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்திய தடகள கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில் நீரஜ் சோப்ரா கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்நிலையில், நீரஜ் கடந்த இரண்டு நாள்களாக கடுமையான காய்ச்சால் அவதிப்பட்டு வருகிறார். இதனால், நேற்று (ஆக. 13) ஹரியனா அரசு ஏற்பாடு செய்திருந்த பாராட்டு நிகழ்ச்சியில் அவரால் பங்கேற்கவில்லை. மருத்துவரின் அறிவுறுத்தலின்படி, நீரஜ் சோப்ராவுக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
ஓய்வு தேவை
இது குறித்து, நீரஜ் சோப்ராவுக்கு நெருங்கிய ஒருவர் ஊடகத்தில் கூறியதாவது, "அவருக்கு நேற்று காய்ச்சல் 103 டிகிரியில் இருந்தது. தற்போது அவரின் உடல்நலம் சற்று தேறியுள்ளது. கரோனா தொற்று பரிசோதனையிலும் தொற்று இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
குறுகிய காலத்தில் அடுத்தடுத்து நிகழ்வுகளில் பங்கெடுப்பதால்தான் அவரது உடல்நலன் சற்று பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (ஆக. 14) மாலை நடக்கும் நிகழ்ச்சிக்கு, அவர் அங்கு நேரடியாக வந்துவிடுவார். மற்ற வீரர்கள் அசோகா ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்" என்றார்.
இதையும் படிங்க: ஈட்டி தூக்கி நின்னான் பாரு.. இவன வெல்ல யாரு.... சரித்திர நாயகன் நீரஜ் சோப்ரா!