இந்தியாவில் உள்ள பல்வேறு விளையாட்டு வீரர்களும் தங்களது இருக்குமிடம் பற்றிய தகவல்களை மூன்று மாதத்திற்கு ஒருமுறை தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் தெரிவிக்காத பட்சத்தில் விளையாட்டு வீரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும். இதுபோன்று மூன்று முறை நோட்டீஸ் வழங்கப்படும். இந்த நோட்டீசிற்கு பதிலளிக்கவில்லை என்றால், ஊக்க மருந்து தடுப்பு விதிகளின் கீழ் அந்த வீரரை நான்கு ஆண்டுகள் வரையில் இடைநீக்கம் செய்ய முடியும்.
இந்நிலையில் கரோனா வைரசால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் தங்களது இருக்குமிடம் பற்றிய தகவலை அளிக்காததற்காக, தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு ஆணையம் சார்பாக 40 வீரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு ஆணையத்தின் இயக்குநர் அகர்வால் பேசுகையில், ''ஊரடங்கு முடிவடையும் தருவாயில் உள்ளது. அதனால் இந்திய விளையாட்டு வீரர்களின் இருப்பிடம் பற்றிய தகவல் எங்களுக்கு தெரிய வேண்டும். இதுவரை இருப்பிமிடம் பற்றிய தகவலை அளிக்காத 40 வீரர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளோம். அதில் சில கிரிக்கெட் வீரர்களும் உள்ளனர்.
ஊக்க மருந்து எதிர்ப்பு நிர்வாகம் மற்றும் மேலாண்மை அமைப்பின் தளத்தில் விளையாட்டு வீரர்கள் விரைவாக இருக்குமிடம் பற்றிய தகவல்களை பதிவிட வேண்டும்'' என்றார்.