உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் ரஷ்யாவின் உலான் உதே நகரில் நடைபெற்றுவருகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். இதில் மகளிர் 51 கிலோ எடைப்பிரிவில் நேரடியாக இரண்டாவது சுற்றில் ஆடிய இந்திய நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், தாய்லாந்து வீராங்கனை ஜுடாமஸ் ஜிட்போங்கை 5-0 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் அவர் கொலம்பியா வீராங்கனை இன்கிரிட் வாலன்சியாவை எதிர்கொண்டார். வாலன்சியா ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் பதக்கம் வென்றவர் ஆவார். இதனால் இப்போட்டியின் மீது மிகுந்த எதிர்ப்பு எழுந்தது. பின்னர் இந்தப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மேரிகோம், 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வாலன்சியாவை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். அவர் சனிக்கிழமை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் துருக்கி வீராங்கனை புசேனாஸ் காக்கிரோகுலுவை எதிர்கொள்கிறார்.
இந்த வெற்றியின் மூலம் மேரிகோம் நடப்புத் தொடரில் பதக்கம் வெல்வது உறுதியாகியுள்ளது. இதனால் உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை தொடரில் இதுவரை ஆறு தங்கப்பதக்கம், ஒரு வெள்ளி என ஏழு பதக்கங்களை வைத்திருக்கிறார். தற்போது இந்தத் தொடரிலும் அவர் ஏதேனும் ஒரு பதக்கம் பெறவுள்ளதால், உலக சாம்பியன்ஷிப் தொடரில் அதிக பதக்கம் வென்ற வீரர் அல்லது வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்திருக்கிறார்.
மகளிர் குத்துச்சண்டை போட்டியில் சிங்கப்பெண்ணாக வலம்வரும் மேரிகோம், கடந்தாண்டு டெல்லியில் நடைபெற்ற குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த முறையும் அவர் தங்கம் வென்று சாதனைப்படைப்பார் என்ற நம்பிக்கையில் அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.