கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசால் நடத்தப்பட்ட கேலோ இந்தியா மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்றவர் சோனாலி. கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சோனாலியின் மல்யுத்தப் பயிற்சி தடைபடாமல் இருக்க, வீட்டிற்கு அருகிலேயே ஒரு மல்யுத்த அரங்கினை ஏற்படுத்தியுள்ளார். இதில் முக்கியமாக பார்க்கப்பட வேண்டியது என்னவென்றால், அவரது தந்தை ஒரு விவசாயி. பொருளாதாரப் பிரச்னைகள் அதிகமாக குடும்பத்தில் இருந்தாலும், மகளின் பயிற்சிக்காக அவர் அதிகமான சிரமங்களை மேற்கொண்டுள்ளார்.
இது குறித்து சோனாலி ஈ டிவி பாரத் செய்திகளிடம் கூறுகையில், “உலக நாடுகளுக்கு முன்னால் இந்தியாவின் பெயரை தலைநிமிரச் செய்ய வேண்டும் என்பது தான் என் கனவு. ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று தங்கம் வெல்ல வேண்டும். கரோனாவால் எனது பயிற்சி தடைபட்டது. ஆனால் அதனை சரிசெய்ய எனது தந்தை எங்கள் விவசாய நிலத்திலேயே மல்யுத்த அரங்கை ஏற்படுத்தினார்'' என்றார்.
மகளின் மல்யுத்தப் பயிற்சி குறித்து தந்தை மஹதிக்கிடம் கேட்கையில், “என் மகள் நாட்டிற்காக பதக்கம் வெல்ல வேண்டும் எனப் போராடி வருகிறாள். அரசின் உதவி கிடைத்தால் நிச்சயம் மல்யுத்த விளையாட்டில் பெரும் பெயர் எடுப்பாள். அவளுக்காக கரோனா காலத்திலும் பயிற்சி செய்ய பயிற்சியாளர் கிரண் மோரேவிடம் பேசினோம். அவர் இந்தச் சூழலிலும் சோனாலிக்குப் பல நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்து வருகிறார்'' என்றார்.
இந்தச் சம்பவம் 'டங்கல்' படத்தில் ஆமிர் கான் மகள்களுக்காக விவசாய நிலத்தில் மல்யுத்த அரங்கம் கட்டுவதை நினைவுபடுத்துவதாக பலரும் கூறிவருகின்றனர்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2020: பும்ராவை புகழ்ந்த டெண்டுல்கர்!