இயற்கையின் அழகுக்கொண்ட கேரளா, இந்தியாவில் சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. அந்த மாநிலத்தவர்கள் எப்போதும் பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் அளிப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.
குறிப்பாக, அங்கு நடைபெறும் ’நேரு’ படகு போட்டித் தொடர் மிகவும் பிரபலமானது. இந்த சூழலில், ஐபிஎல் கிரிக்கெட்டின் வருகைக்குப் பிறகு கபடி, கால்பந்து, பேட்மிண்டன் போன்ற விளையாட்டு போட்டிகள் ஐபிஎல் ஸ்டைலில் நடைபெற்று ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன. அந்த வரிசையில், கேரளாவில் கழிமுகம் (backwaters) பகுதியில் நடைபெறும் பிரசித்தி பெற்ற படகு போட்டியும் இணையவுள்ளது.
நேரு படகு போட்டி நடைபெற்றாலும், கேரளாவின் பாரம்பரியத்தையும் சுற்றலாத் தலங்களையும் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக, சாம்பியன்ஸ் போட் லீக் (படகு போட்டி) வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ஆழப்புழாவில் தொடங்கவுள்ளது.
மொத்தம், 9 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் 12 போட்டிகளாக, 12 ஏரிகளில், 12 வாரங்களின் இறுதி நாட்களில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்க வேண்டுமென்றால், நேரு படகுத் தொடரில் குறைந்த நேரத்திற்குள் எல்லைக் கோட்டை கடக்க வேண்டும்.
ஆகஸ்ட் 10ஆம் தேதி தொடங்கும் இந்தத் தொடர் கேரள மாநிலம் உருவான நாள் (நவம்பர் 1) அன்று முடியவுள்ளது. இப்போட்டியை பார்க்கும் பார்வையாளர்களுக்கு சிறப்பு வசதிகள் வழங்கப்படவுள்ளன. ரூ. 40 கோடி செலவில் நடைபெறும் இந்தத் தொடர் மூலம் 20 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என, கேரள நிதி அமைச்சரும், ஆழப்புழா சட்டப்பேரவை உறுப்பினருமான டாக்டர். டி. எம். தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தத் தொடர் மூலம் ரூ. 130 கோடி லாபம் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.