ETV Bharat / sports

கருணாநிதி 3ஆம் ஆண்டு நினைவு நாள்: 2ஆவது ஆண்டு மெய்நிகர் மாரத்தான் போட்டிகள்! - மாரத்தான் போட்டி பதிவு

கலைஞர் நினைவு பன்னாட்டு 2ஆவது ஆண்டு மெய்நிகர் மாரத்தான் போட்டிக்கான முதல் பதிவை சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

கலைஞர் நினைவு பன்னாட்டு 2ஆவது ஆண்டு மெய்நிகர் மாரத்தான் போட்டி
கலைஞர் நினைவு பன்னாட்டு 2ஆவது ஆண்டு மெய்நிகர் மாரத்தான் போட்டி
author img

By

Published : Aug 6, 2021, 5:01 PM IST

சென்னை: சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "தமிழ்நாடு, இந்தியா என்ற எல்லைகளைக் கடந்து உலக ஆளுமைகளில் ஒருவராக நிலைபெற்றவர் கருணாநிதி. அவர் நம்மைவிட்டு மறைந்தாலும், மறையாமல் கொள்கையாக நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

அத்தகைய சிறப்புக்குரிய தலைவரின் 2ஆம் ஆண்டு நினைவுநாளில் (ஆக.7, 2020) கலைஞர் நினைவு பன்னாட்டு மெய்நிகர் மாரத்தான் ஓட்டத்தின் முதல் பதிவை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு தொடங்கி வைத்தார்.

முந்தைய ஆண்டின் ஆக.6 முதல் ஆக.31 வரை நடைபெற்ற இம்மாரத்தான் போட்டியில் 28 உலக நாடுகளிலிருந்தும், இந்தியாவின் 11 மாநிலங்களிலிருந்தும் 8,541 பேர் பங்கேற்றனர்.

அவர்களிடம் பதிவுக்கட்டணமாக ரூ.300 பெறப்பட்டதில், சேவை வரி நீங்கலாக கிடைத்த 23 லட்சத்து 41ஆயிரத்து 726 ரூபாய், சென்னை தலைமைச் செயலகத்தில் நிதித்துறைச் செயலாளரிடம் கரோனா பேரிடர் நிதிக்காக அளிக்கப்பட்டது.

கடந்த ஆண்டைப் போலவே, கருணாநிதியின் 3ஆம் ஆண்டு நினைவுநாளில், கலைஞர் நினைவு பன்னாட்டு மெய்நிகர் 2ஆம் ஆண்டு மாரத்தான் போட்டிக்கான இணையவழி முதல் பதிவை திமுக இளைஞர் அணி செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகஸ்ட் 7ஆம் தேதி மாலை 5 மணியளவில் (கலைஞர் நினைவிடம் - மெரினா கடற்கரையில்) தொடங்கி வைக்கிறார்.

கரோனா பேரிடர் காலத்தில் உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து சொல்லி வருவது உடற்பயிற்சி, உடற்பயிற்சி, உடற்பயிற்சி மட்டும் தான்.

தற்போதைய உலக தேவையான, நோய் எதிர்ப்புச் சக்தியை மக்களிடம் உருவாக்கவும் உடற்பயிற்சியின் தேவையினை எடுத்துச் சொல்வதோடு நில்லாமல், அதில் அனைவரையும் ஈடுபடுத்த, கருணாநிதியின் நினைவைப் போற்றிடும் நிகழ்வாகவும் இது வடிவமைக்கப்படுகிறது.

மெய்நிகர் மாரத்தான்

ஒவ்வொரு ஆண்டும் பன்னாட்டு மாரத்தனாக உடல் நலத்தையும், உள நலத்தையும் மேன்மைப்படுத்துதல், உடல் வலிமையை ஊக்குவித்தல் மற்றும் கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் நோக்கத்திற்காகவும் இம்மாரத்தான் போட்டி முன்னெடுக்கப்படுகிறது. ஆக.7 முதல் 25 நாட்கள், அதாவது ஆகஸ்ட் 31 வரை இம்மாரத்தானில் பங்கேற்கலாம்.

உலகத்தின் எந்த நாட்டிலிருந்தும் அவரவர் இருக்கும் இடத்திலிருந்தே இணையதளம் (www.kalaignarmarathon.com) வாயிலாகப் பதிவுசெய்து இம்மாரத்தானில் பங்கேற்க முடியும்.

வீட்டு மாடியில், தோட்டத்தில், ட்ரட் மில்லில், எப்படி வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், தங்களின் வசதி வாய்ப்புகளுக்கேற்ப உள்ளூர் பேரிடர் விதிகளுக்கு உட்பட்டு ஓடலாம்.

அதற்கான சான்றிதழ் இணையம் வாயிலாகவும், பதக்கங்கள் அந்தந்த மாவட்டங்களிலேயே வழங்கப்பட உள்ளது.

தத்தம் நாடுகளில் நிலவும் ஊரடங்குச் சட்ட விதிகள், முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள், தனி மனித இடைவெளி ஆகியவற்றைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இப்போட்டியில் பங்கேற்பதற்கு வயது ஓர் தடையில்லை.

ஆர்வம் மட்டுமே ஆதாரம். நுழைவுக் கட்டணமாக ரூ.300 பெறப்படுகிறது. இவ்வாறு பெறப்படும் கட்டணங்களின் முழுத்தொகையும் கரோனா நோய்த்தடுப்பு நிவாரண நிதியாக முதலமைச்சர் அவர்களிடம் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.