ஆசிய விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்ளிட்ட இந்தியாவின் சிறந்த ஈட்டி எறிபவர்களுக்கான தேசிய பயிற்சி முகாம் பாட்டியாலாவில் உள்ள தேசிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுவந்த நிலையில், தற்போது, அந்த முகாம் புவனேஷ்வரில் உள்ள கலிங்க மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக இந்திய தடகள கூட்டமைப்பு (ஏஎஃப்ஐ) தகவல் வெளியிட்டுள்ளது.
இந்திய தடகள கூட்டமைப்பு அறிக்கையில், "அணியின் பாதுகாப்புக் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வீரர்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பிரத்யேக குழுவினர் மூலம் வழங்கப்பட்டுள்ளது. அதில், கோவிட்-19 நெறிமுறைகளும் வழிகாட்டுதல்களும் இடம்பெற்றுள்ளன" எனக் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து பேசிய நீரஜ் சோப்ரா, "ஒலிம்பிக் 2021இன் பயிற்சிக்காக நாங்கள் இங்கு வந்துள்ளோம். 2017ஆம் ஆண்டில், நான் இங்கு பயிற்சி பெற்றுதான் 2017 ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றேன். இங்கு பல அன்பான நினைவுகள் உள்ளன. எங்கள் சிறந்த முயற்சிகளால் ஒலிம்பிக்கில் சிறப்பாகச் செயல்படுவோம் என்று நம்புகிறோம்" எனத் தெரிவித்தார்.
முன்னதாக, இந்திய தடகள வீரர்களுக்கான புதிய தலைமைப் பயிற்சியாளராக ராதாகிருஷ்ணன் நாயர் நியமிக்கப்படுவதாக ஏஎஃப்ஐ அறிவித்தது. 62 வயதான நாயர், கடந்த ஜூலை மாதத்திலிருந்து செயல் தலைமைப் பயிற்சியாளராக இருந்துவருகிறார்.