டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா தொடர்ந்து ஈட்டி எறிதலில் பல வெற்றிகள் பெற்று நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகிறார்; மேலும் அவர் டைமண்ட் லீக்கில் தங்கப்பதக்கம் வென்ற பிறகு ’90 மீட்டர் ஈட்டி எறிவது நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும்’ என்று நமது ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அந்தப் பேட்டி,
இது உங்களது முதல் டைமண்ட் லீக் வெற்றி. இதில் சாதனைப் படைத்த முதல் இந்தியர் நீங்கள் தான்... எப்படி உணர்கிறீர்கள்?
உலகின் தலைசிறந்த வீரர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில், இந்தியாவுக்கு கிடைத்த முதல் வெற்றி இது என்பது மகிழ்ச்சியாக இருந்தது. லீக்கில் குறைந்த நாட்கள் மட்டுமே இருந்தாலும் வீரர்கள் தங்கள் செயல்திறனை வெளிப்படுத்துகிறார்கள்.
இதில் நானும் பங்கேற்பாளர்களில் ஒருவராக இருந்து, வெற்றியினை ருசித்தபோது ஒரு சிறந்த உணர்வாக இருந்தது. இந்தப் போட்டியில் நமது நாட்டிலிருந்து மேலும் பல விளையாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள் என்று நம்புகிறேன். இது ஒரு உலக அளவிலான போட்டியாகும். இந்தப் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினால், நாம் ஒலிம்பிக், ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுகளில் சிறப்பாக செயல்படுவோம். அது நிச்சயமாக இந்தியாவை தடகள அரங்கில் உயர்த்தும்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நீங்கள் தவறவிட்ட பிறகு, இது உங்களின் முதல் போட்டியாக இருந்தது. காயத்தில் இருந்து மீண்டது மற்றும் களம் கண்டது குறித்து சொல்லுங்களேன்?
அந்த நேரத்தில் வலி அவ்வளவு கடுமையாக இல்லை. நான் சரியான நேரத்தில் குணமடைவேன் என்று தோன்றியது. கடைசி வரை நாங்கள் முயற்சித்தோம். ஆனால், காயம் காரணமாக நான் காமன்வெல்த் விளையாட்டுகளைத் தவற விட்டுவிட்டேன்.
அப்போது காயத்திலிருந்து மீண்டு வருவதிலேயே கவனம் செலுத்த நினைத்தோம். அதன்பிறகு இது எனது முதல் போட்டி. இடைப்பட்ட காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சி எடுத்துக்கொண்டு இருந்தேன். உடல் தகுதியை எட்டியதும் டைமண்ட் லீக்கில் கலந்து கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். ஜெர்மனியில் ஒரு டாக்டரைப் பார்க்கச் சென்றோம். எனது பயிற்சியாளரிடம் நல்ல பயிற்சியும் பெற்றேன்.
செப்டம்பர் 8 ஆம் தேதி நடைபெறவிருக்கும் டைமண்ட் லீக் இறுதிப் போட்டியில் உங்களுக்கு ஏதேனும் இலக்குகள் உள்ளதா?
ஆம், இதுதான் இந்த சீசனின் கடைசிப்போட்டி. நான் தற்போது இருக்கும் இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமே தவிர வேறு திட்டங்கள் எதுவும் இல்லை. கூடுதலாக எதையும் செய்ய எனக்கு அதிக நேரம் இல்லை. இதுவரை எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
சீசனை நல்ல ஆரோக்கியத்துடன் முடிக்க முயற்சிப்பேன். எல்லோரும் 90மீட்டர் எப்போது வீசுவீர்கள் என்று கேட்கிறார்கள். ஆனால், நான் சீராக இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 90மீட்டர் நடக்க வேண்டிய போது நடக்கும். நான் எந்த அழுத்தத்தையும் எடுக்க விரும்பவில்லை’ என இனிமையாகப் பதிலளித்தார்.
இதையும் படிங்க: ஹாங்காங்கை வீழ்த்திய இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி