மத்திய அரசின் பத்ம விருதுகளுக்கான பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 16 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 118 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதும் வழங்கப்படவுள்ளது. 2012ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரும், 6 முறை உலக சாம்பியனுமான மேரி கோமிற்கு நாட்டின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேரி கோம் பேசுகையில், ''தற்போது எனது இலக்கு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிபெற வேண்டும். அதன்பிறகுதான் பதக்கம் வெல்வதற்கான முயற்சிகளை எடுக்க முடியும். நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருதுக்கு என்னை பரிந்துரை செய்த விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் பிரதமருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
நம் நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை பெற வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதற்கு நான் டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லவேண்டும். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிதான் நான் பங்கேற்கும் கடைசி ஒலிம்பிக் போட்டியாக இருக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால் 2024ஆம் ஆண்டின்போது எனது வயது 40-ஐ தொட்டுவிடும். அதன்பிறகு இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் என்னை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்குமா என்பது பற்றி தெரியாது.
என்னுடன் பத்ம விருதுகள் வென்றுள்ள பிவி சிந்து, ராணி ராம்பால் ஆகியோருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களுக்கு நான் கூறுவது ஒன்றுதான், அது, நீங்கள் இப்போது செய்துகொண்டிருப்பதைத் தொடர்ந்து செய்யுங்கள். இன்னும் பல விருதுகளும் சாதனைகளும் உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றன. எனக்கு வழங்கப்பட்டுள்ள பத்ம விபூஷண் விருதினை நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்கிறேன்'' என்றார்.
இதையும் படிங்க: கிராண்ட்ஸ்லாம் தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் அரேபிய வீராங்கனை!