லிமா: பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பின் (ISSF) ஜூனியர் துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளான இன்று (அக். 3) 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மற்றும் 10 மீட்டர் ரைஃபிள் போட்டிகள் நடைபெற்றன.
ஏர் பிஸ்டல் கலப்புப் பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் மனு பாக்கர், சரப்ஜோட் சிங் தங்கப்பதக்கம் வென்றனர். இத்தொடரில், மனு பாக்கர் வெல்லும் மூன்றாவது தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் 16 -12 என்ற புள்ளிக்கணக்கில் பெலராஸ் அணியை வீழ்த்தி இந்தியாவின் ஷிகா நர்வால், ரிதம் சங்வான் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.
பிஸ்டல் புலிகள்
ஆண்களுக்கான 10 ஏர் பிஸ்டல் போட்டியில், நவீன், சரப்ஜோட் சிங், சிவா நர்வால் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, பெலராஸ் அணியை 16 -14 புள்ளிகளில் வென்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. அதேபோல், 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் பார்த் மகிஜா, ஸ்ரீகாந்த் தனுஷ், ராஜ்பிரீத் சிங் ஆகியோர் பலம் வாய்ந்த அமெரிக்க அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றனர்.
முன்னதாக, 10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்புப்பிரிவிலும், மகளிர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவிலும் இந்தியா வெள்ளி வென்றது. இத்தொடரில், 6 தங்கம், 6 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்களைப் பெற்று இந்தியா முதலிடம் வகிக்கிறது. 10 பதக்கங்களுடன் அமெரிக்கா இரண்டாம் இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க: RCB vs PBKS: பெங்களூரு பேட்டிங்; பஞ்சாப் அணியில் 3 மாற்றங்கள்