நேபாள் தலைநகர் காத்மண்டு, போக்ரஹாவில் நடைபெற்றுவரும் 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நிறைவு பெற இன்னும் இரண்டு நாட்களே உள்ளது. இதனிடையே இந்தத் தொடரின் முதல் நாளில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் இந்திய விளையாட்டு வீரர்கள் பதக்கங்களைக் குவித்து அசத்தியுள்ளனர்.
அதன்படி இந்திய அணி தற்போது வரை 110 தங்கம், 69 வெள்ளி, 35 வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றி பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் 43 தங்கம், 34 வெள்ளி, 65 வெண்கலம் என 142 பதக்கங்களுடன் நேபாள் அணி இரண்டாம் இடத்திலும், மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் முறையே இலங்கை (30 தங்கம், 57 வெள்ளி, 83 வெண்கலம்), பாகிஸ்தான் (23 தங்கம், 30 வெள்ளி, 34 வெண்கலம்) ஆகிய அணிகள் உள்ளன.
சனிக்கிழமை பல்வேறு பிரிவுகளின்கீழ் நடத்தப்பட்ட நீச்சல் போட்டியில், இந்திய அணி ஏழு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்று ஆதிக்கம் செலுத்தியது. ஸ்ரீஹரி நடராஜ் (100 மீ பேக்ஸ்ட்ரோக்), ரிச்சா மிஸ்ரா (800 மீ ப்ரீஸ்டல்), சிவா (400 தனிநபர் மெட்லி), மானா பட்டேல் (100 மீ பேக்ஸ்ட்ரோக்), சஹாத் அரோரா (50 மீ பேக்ஸ்ட்ரோக்), லிக்கித் (50 மீ பேக்ஸ்ட்ரோக்), ருஜுத்தா பாத் (50 மீ ப்ரீஸ்டைல்) ஆகியோர் தங்கம் வென்றனர்.
இதே போன்று துப்பாக்கிச்சுடுதல் ஆடவர் 25 மீ ரேபிட் ஃபையர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் அனிஷ் பான்வாலா தங்கமும், அவர் பாபேஷ் செகாவாத், ஆதர்ஷ் சிங் ஆகியோருடன் அணியாகக் கலந்துகொண்டு மற்றொரு தங்கமும் வென்றார். மேலும் 10 மீ ஏர் ரைபில் கலப்பு இரட்டையர் பிரிவில் மெகுலி கோஷ், யாஷ் வர்தன் ஆகிய இணை இந்தியாவுக்கு துப்பாக்கிச் சுடுதலில் நேற்று மூன்றாவது தங்கம் வென்று தந்தனர்.
பளு தூக்குதலில் மகளிர் 81 கிலோ எடைப்பிரிவில் சார்ஷ்டி சிங் 190 கிலோ எடையையும், மகளிர் 87 கிலோ எடைப்பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனுராதா 200 கிலோ எடையையும் தூக்கி தங்கம் வென்றனர். இதன்மூலம் பளு தூக்குதலில் இந்திய அணி இதுவரை 10 பதக்கங்கள் (9 தங்கம், ஒரு வெள்ளி) வென்றுள்ளது.
பென்சிங் போட்டியில் இந்திய அணி இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலமும், சைக்கிள் பந்தயத்தில் இரண்டு தங்கம் ஒரு வெள்ளிப்பதக்கத்தையும் வென்றது. தடகளப் போட்டியில் கடைசி நாளில் இந்திய அணி ஒன்பது பதக்கங்களை வென்றது.
இந்திய மகளிர் கால்பந்து அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. நடப்பு சாம்பியனான இந்திய அணி வரும் திங்கட்கிழமை நடைபெறும் போட்டியில் நேபாளைச் சந்திக்கிறது.
இதையும் படிங்க: 'கோலி கிட்ட வச்சிக்காதீங்க' - வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை ட்விட்டரில் கலாய்த்த அமிதாப்!