துப்பாக்கிச் சூடுதல் வீரர், வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் சம்மேளனம் (ஐஎஸ்எஸ்எஃப்) வெளியிட்டுள்ளது. இதில், மகளிர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை அபூர்வி சந்தேலா 1926 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
இதனை கொண்டாடும் விதமாக அவர், என் வாழ்கையில் புதிய மைல் கல் சாதனை படைத்துள்ளேன் என தான் முதல் இடத்தை பிடித்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பை தொடரில், இவர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடர்களில் பங்கேற்கும் தகுதியை இவர் பெற்றுள்ளார்.
இதேபோல், ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர்களான அபிஷேக் ஷர்மா மூன்றாவது இடத்திலும், சவுரப் சவுத்ரி ஆறாவது இடத்திலும் உள்ளனர்.