நைரோபி (கென்யா): கென்யத் தலைநகர் நைரோபியில் நடந்துவரும் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 4*400 கலப்புத் தொடர் ஓட்டத்தில் இந்தியா வெண்கலம் வென்றது.
இது உலகத்தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியா வெல்லும் 5ஆவது பதக்கம் ஆகும்.
இந்தியா சார்பில் பங்கேற்ற பிரியா, ஸ்ரீதர், சமி, கபில் ஆகிய நால்வரும் 3 நிமிடங்கள் 20.60 நொடிகளில் இலக்கை எட்டி, மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். இதன்மூலம் அவர்களுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது. இவர்களில் ஸ்ரீதர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர் ஆவார்.
நைஜீரியா, போலந்து ஆகிய நாடுகள் முறையே 3 நிமிடங்கள் 19.70 நொடிகளிலும் மற்றும் 3 நிமிடங்கள் 19.80 நொடிகளிலும் இலக்கை எட்டி, முதல் மற்றும் இரண்டாவது இடத்தைப் பிடித்து, தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை கைப்பற்றின.
சாதனைப் படைத்த இந்தியா
இந்த கலப்புத் தொடர் ஓட்டத்தில் 3ஆவது இடத்தைப் பிடித்ததன்மூலம், உலகளவில் இந்தியா கலப்பு ஓட்டக்குழுவினர், இரண்டாவது நல்ல ஓட்டக்குழுவினராக அங்கீகாரம் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.
இந்தியாவிற்கு கென்யாவில் கிடைத்த தங்கத்திற்கு முன்பு, உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 2002ஆம் ஆண்டு வட்டு எறிதலில் சீமா அனிட்டீல் வெண்கலப் பதக்கமும், 2014ஆம் ஆண்டு வட்டு எறிதலில் நவ்ஜீத் கவுர் தில்லோன் வெண்கலப் பதக்கமும், 2016ஆம் ஆண்டு ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கமும், 2018ஆம் ஆண்டு 400 மீட்டர் ஓட்டத்தில் ஹிமா தாஸ் தங்கப்பதக்கமும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிரதமர் வடிவில் தந்தையைப் பார்த்தேன்- பவானி தேவி!