13ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் நேபாளம் தலைநகர் காத்மண்டு, போக்ஹராவில் நடைபெற்றுவருகின்றன. இதில், நேற்று நடைபெற்ற ஆடவர் வாலிபால் இறுதிப் போட்டியில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில், 20-25 என்ற புள்ளிகள் கணக்கில் முதல் செட்டை இழந்த இந்தியா, அதன்பின் ஆட்டத்தில் எழுச்சிக் கண்டு அடுத்த நடைபெற்ற மூன்று செட்களிலும் வெற்றிபெற்றது.
இரண்டாவது செட்டை 25-15 என்ற புள்ளிகள் கணக்கிலும், மூன்றாவது செட்டை 25-17 என்ற கணக்கிலும், நான்காவது செட்டை 29-27 என்ற கணக்கிலும் வென்றது. இதன் மூலம், இந்தியா 3-1 என்ற செட் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தனதாக்கியது.
இதேபோல், நடைபெற்ற மகளிர் பிரிவில், இந்திய அணி 3-2 என்ற செட் கணக்கில் நேபாளத்தை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றது. முதல் செட்டை இந்தியா 25-17 என்ற கணக்கில் வென்றது, அடுத்து நடைபெற்ற இரண்டாவது, மூன்றாவது செட்டை 23-25, 21-25 என்ற கணக்கில் தோல்வியுற்றது.
இதையடுத்து, நான்காவது செட்டில் கம்பேக் தந்த இந்தியா 25-20 என்ற கணக்கில் அந்த செட்டை வென்றது. இரு அணிகளும் தலா இரண்டு செட் களில் வெற்றிபெற்றதால் ஆட்டத்தின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் ஐந்தாவது செட் போட்டி நடைபெற்றது. இதில், ஆதிக்கம் செலுத்திய இந்திய வீராங்கனைகள் 15-6 என்ற கணக்கில் கடைசி செட்டை லாவகமாக வென்றனர்.