சென்னை: சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 'Meet the champion' என்ற நிகழ்வு இன்று (மார்ச் 25) நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற முதல் வாள்வீச்சு வீராங்கனையான பவானி தேவி, பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது, நிகழ்ச்சி மேடையில் பேசிய அவர், "பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் திறமையுடன் செயல்பட பெற்றோர்களின் ஒத்துழைப்பு தேவை. ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறியது. அடுத்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு பதக்கத்தை நிச்சயம் வென்று தருவேன்.
'அரசும் பெருநிறுனங்களும் ஒத்துழைக்கவும்': வாள்வீச்சு விளையாட்டிற்கு பயிற்சிகளை மேற்கொள்ள இந்தியாவில் வசதிகள் இல்லை. இருப்பினும் எனது பயிற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பவானி தேவி, "கிரிக்கெட் விளையாட்டிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், மற்ற விளையாட்டு போட்டிகளுக்கும் கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.
கல்வியைப் போலவே விளையாட்டுகளுக்கும் பெற்றோர்கள் முக்கியத்துவம் தர வேண்டும். மத்திய, மாநில அரசுகள் விளையாட்டுத் துறைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்குவது மகிழ்ச்சியாக உள்ளது. வாள்வீச்சு இந்திய அளவில் முக்கியத்துவம் பெற அரசும், பெருநிறுவனங்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வாள்வீச்சு விளையாட்டை மேம்படுத்த பயிற்சி மையங்களை அதிகரித்து தர வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ICC Women's World Cup: வீழ்ந்தது வங்கதேசம்; தொடரில் நீடிக்கும் இந்தியா