ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த ஆண்டு 32ஆவது கோடை கால ஒலிம்பிக் தொடங்க இன்னும் எட்டு மாதம் மட்டுமே உள்ள நிலையில், ஊக்க மருந்து விவகாரம் தொடர்பான வீரர்களின் பட்டியலை ரஷ்யா அழித்துவிட்டதால் அனைத்து விதமான விளையாட்டுப் போட்டிகளில் ரஷ்யா பங்கேற்க அடுத்த நான்கு ஆண்டுகளுக்குத் தடைவிதித்து உலக ஊக்க மருந்து அமைப்பு உத்தரவிட்டது. மேலும், அனைத்து நாட்டு வீரர்களுடைய ஊக்க மருந்து சோதனை விவரங்களை தங்களிடம் ஒப்படைக்கும் படியும் அந்த அமைப்பு கேட்டுகொண்டது.
அதன்படி, ஊக்க மருந்து சோதனையில் தோல்விடையும் வீரர்களின் விவரங்களை உலக ஊக்க மருந்து அமைப்பு தற்போது வெயிட்டுவருகிறது. அந்த வகையில், இந்திய குத்துச்சண்டை வீரர் சுமித் சங்வானிடமிருந்து (91 கிலோ எடைப் பிரிவு) தேசிய ஊக்க மருந்து அமைப்பு, ஊக்க மருந்து சோதனைக்காக கடந்த அக்டோபர் 10ஆம் தேதி அவரது சிறுநீர் மாதிரியை சேகரித்து, உலக ஊக்க மருந்து சோதனை அமைப்புக்கு அனுப்பியது. தோஹாவில் உள்ள ஊக்க மருந்து தடுப்பு மையத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் அவர் தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
அவரது ஏ மாதிரியில் அசிடாசோலமைட் (Acetazolomide) என்னும் தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தை உட்கொண்டதால் அவர் இடை நீக்கம் செய்யப்படுவார் என கூறப்படுகிறது. 26 வயதான சுமித் சங்வான், 2012 லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பங்கேற்றிருந்தார். மேலும், 2017இல் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இவர் வெள்ளிப் பதக்கம் வென்றார் என்பது நினைவுகூரத்தக்கது.
இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நீரஜ் ஊக்க மருந்து சோதனையில் சிக்கி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், அந்த வரிசையில் சுமித் சங்வானும் இணைந்துள்ளது குத்துச்சண்டை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பின் விளம்பரத் தூதராக பிரபல பாலிவுட் நடிகர் நியமனம்!