ஹாக்கி இந்தியா அமைப்பில் பதிவுசெய்த நடுவர்கள், நடுவர்களின் மேலாளர்கள், டெக்னிக்கல் அலுவலர்கள் ஆகியோர் மூன்று பிரிவுகளாக (Grade) மதிப்பீடு செய்யப்படுவார்கள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவர் முகமது முஷ்டாக் அகமது பேசுகையில், ''ஆன்லைன் தேர்வு முடிவுகள், உடற்தகுதித் தேர்வு முடிவுகள், உள்ளூர்ப் போட்டிகளில் நடுவராகப் பங்கேற்ற முடிவுகள் ஆகியவற்றைக் கணக்கில்கொண்டு கிரேடு வழங்கப்படும்.
புதிதாக ஹாக்கி இந்தியா அலுவலர்களின் தரத்தை மேம்படுத்த இன்னும் சில மதிப்பீடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. நடுவர்களும், நடுவர்களின் மேலாளர்களும் ஒவ்வொரு போட்டி முடிவடைந்த பின்னர் ஹாக்கி இந்தியா அமைப்பில் தங்களது அறிக்கையைச் சமர்பிக்க வேண்டும்.
இதன்மூலம் நடுவர்கள் செய்யும் தவறை, அவர்கள் மீண்டும் செய்யாமல் தடுக்க உதவியாக இருக்கும். இந்த அறிக்கைகள் மூலமே முக்கியத் தொடர்களில் நடுவர்களாக யார் பணியாற்றுவர் என்ற முடிவு எடுக்கப்படும். அதேபோல் அரையிறுதி, இறுதிப் போட்டிகளுக்கு யார் நடுவர் என்ற விவரம் போட்டி நடத்துவதற்கு முன்பே தெரிந்துகொள்ளவும் உதவியாக இருக்கும்.
ஹாக்கி இந்தியா நடுவர்களின் தரத்தை மேம்படுத்துவதுதான் இப்போதைய திட்டம். அவர்களுக்குள் ஒரு போட்டியை உருவாக்கினால் நிச்சயம் சிறந்த நடுவரை அடையாளம் காண முடியும். இதன்மூலம் அனைவரும் மேம்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. முக்கியமான நேரங்களில் நடுவர்களின் முடிவுகள் பெரும் விளைவுகள் ஏற்படுத்தும் என்பதால், நடுவர்களின் தரத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்'' என்றார்.
இதையும் படிங்க: ஹாக்கி வீரர்கள் ஒரு மாத கால விடுப்பு எடுக்க எஃப்.ஐ.எச் அனுமதி!