தோஹாவில் மார்ச் மாதம் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியின், 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்த போட்டியில் அவர் 2 நிமிடங்கள் 2.70 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெற்றி பெற்றார்.
இந்நிலையில் கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வியடைந்ததாக பத்திரிக்கை நிறுவனம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி அவருக்கு நடத்தப்பட்ட 'ஏ' மாதிரி சோதனையில் அவர் தோல்வியடைந்ததால் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோமதி மாரிமுத்து 'பி' மாதிரி சோதனையில் தோல்வியடையும் பட்சத்தில், அவருக்கு நான்கு ஆண்டுகள் வரை தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. எனினும் இந்த ஊக்க மருந்து சோதனை குறித்து தங்களுக்கு தற்போது வரை எந்த தகவலும் அளிக்கப்படவில்லை என்று இந்திய தடகள வீரர்கள் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய கோமதி மாரிமுத்து, "தான் செய்தித்தாள்களில் படித்த பின்பே இந்த தகவலை அறிந்ததேன். உரிய விளக்கம் அளிக்கும்படி இந்திய தடகள கூட்டமைப்பிடம் வலியுறுத்தியுள்ளேன். தன் வாழ்நாளில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பயன்படுத்தியது இல்லை" என்று தெரிவித்தார்.