இந்தியாவில் குத்துச்சண்டை போட்டியில் கோலோச்சி இருப்பவர் மேரி கோம். மணிப்பூரைச் சேர்ந்த 36 வயதான இவர் உலக குத்துச்சண்டை தொடரில் இதுவரை ஆறு தங்கப் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளார்.
இந்நிலையில் காணொலி மூலம் பேசிய மேரிகோம் தான் சிறு வயது முதல் மேற்கொண்ட பயிற்சிகள் குறித்தும், தனக்கு குத்துச்சண்டை எவ்வளவு முக்கியமானது என்பது குறித்தும் மனம் திறந்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "நான் எப்போதும் விளையாட்டில் ஆர்வமாக இருந்தவள், ஆனால் விளையாட்டின் பங்கு, அதன் நன்மைகளை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. எனது கிராமத்தில் சிறுவர்களுடன் விளையாடுவதை நான் மிகவும் விரும்பினேன், ஏனென்றால் பெண்கள் ஒருபோதும் வெளியே சென்று விளையாடியதில்லை. அச்சமயம் சிறுவர்கள் மட்டுமே வெளியில் விளையாடுவார்கள். என் குழந்தை பருவத்தில் நிலைமை இப்போது இருந்ததைவிட முற்றிலும் மாறுபட்டது.
நான் குத்துச்சண்டை விளையாட்டை விளையாட கடவுள் என்னைத் தேர்ந்தெடுத்தார் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நான் இதுபோன்ற ஒரு தொழிலை மேற்கொள்வேன் என்று நினைத்ததில்லை. விளையாட்டிற்குள் நுழைந்து என் முழு வாழ்க்கையையும் அதில் செலவிடுவேன் என்பதற்கு வேறு எந்தக் காரணமும் இருக்க முடியாது.
அதன் பின்பே நான் விளையாட்டின் நன்மைகளைப் புரிந்துகொள்ள தொடங்கினேன். நீங்கள் விளையாடுவதில் சிறப்பாகச் செயல்பட்டால், உங்களுக்குச் சிறந்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும், உங்களின் வாழ்க்கையில் நீங்கள் சிறந்து விளங்க அது உங்களுக்கு உதவும்.
குத்துச்சண்டை விளையாட்டு ஆணாதிக்கம் செலுத்தும் ஒன்றாகும். இது பெரும்பாலும் ஆண்களின் விளையாட்டாகவே கருதப்படுகிறது. அதனால் ஆரம்பத்தில் நான் குத்துச்சண்டையை தொடங்கியபோது, அது மிகவும் கடினமாக இருந்தது.
என்னைத் தவிர ஒன்று அல்லது இரண்டு பெண்கள் மட்டுமே அங்கு பயிற்சி பெறுவார்கள். அதனால் நான் சிறுவர்களுடன் பயிற்சி பெற வேண்டியிருந்தது. எனவே நான் சொல்ல விரும்புவது குத்துச்சண்டை ஆண்களுக்கான விளையாட்டு மட்டுமல்ல. ஆண்களால் விளையாட முடிந்தால், பெண்களால் அதனை விளையாட முடியாதா என்று எண்ணினேன். தற்போது அதனை நிரூபித்தும் காட்டியுள்ளேன்" என்று தெரிவித்தார்.