அடுத்தாண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் சீனாவில் பிப்ரவரியில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ளும் இந்திய வீராங்கனைகளுக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் நேற்று டெல்லியில் தொடங்கின. இதில் 51 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம், ரிது க்ரேவாலை வீழ்த்தினார்.
இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் முன்னாள் உலக ஜுனியர் சாம்பியனான நிகாத் ஜரின், தேசிய சாம்பியனான ஜோதியை வீழ்த்தினார். இதனிடையே இன்று நடைபெறும் இரண்டாவது சுற்றுப் போட்டியில் சீனியர் வீராங்கனை மேரி கோமை எதிர்த்து நிகாத் ஜரின் களமிறங்குகிறார்.
போட்டிக்குப் பின் பேசிய நிகாத் ஜரின், "நாளை நடைபெறும் போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். என்னுடைய நூறு விழுக்காடு திறமையை இப்போட்டியில் வெளிப்படுத்துவேன். இப்போட்டியால் எனக்கு எந்தவித நெருக்கடியும் இல்லை. ஏனெனில், இப்போட்டியை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததே நான்தான். எனக்கு மேரி கோமை எதிர்த்து விளையாட வாய்ப்பு கிடைத்து மகிழ்ச்சி" என்றார்.
முன்னதாக, கடந்த அக்டோபர் மாதம், மேரி கோமை எதிர்த்து ஒலிம்பிக் தகுதிச்சுற்றுக்கான போட்டியில் விளையாட தனக்கு அனுமதி தர வேண்டும் எனக் கூறி இந்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு ஜரின் கடிதம் எழுதியிருந்தார். அதைத் தொடர்ந்தே உலக சாம்பியன்சிப்பில் தங்கம், வெள்ளி வென்றால் மட்டுமே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற முடியும் என்ற விதி மாற்றியமைக்கப்பட்டது.
இந்தாண்டு ரஷ்யாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டையில் மேரி கோம் வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.