டோக்கியோ ஒலிம்பிக்கில் தமிழ்நாடு தடகள வீராங்கனை தனலட்சுமி பங்கேற்றார். திருச்சி குண்டூரைச் சேர்ந்த இவருக்கு தந்தை உயிரிழந்துவிட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு சகோதரி ஒருவரும் இறந்தார்.
இந்தச் சூழலில் தனலட்சுமி டோக்கியோவுக்கு சென்றிருந்தபோது அவரது மற்றொரு சகோதரியும் உடல் நிலை சரியில்லாததான் காரணமாக உயிரிழந்தார்.
ஆனால், சகோதரி உயிரிழந்ததை தனலட்சுமியிடம் கூறினால் அவர் மனதளவில் நொறுகிப்போவார், போட்டியில் கவனம் செலுத்த முடியாமல் போகும் என்பதால் அவரிடம் மறைவு செய்தியை தாய் மறைத்துவிட்டார்.
ஒலிம்பிக் போட்டிகள் முடிந்து ஆகஸ்ட் 7ஆம் தேதி திருச்சி வந்தார். தாய்நாடு திரும்பிய அவருக்கு சகோதரியின் மறைவு செய்தி தாயார் மூலம் தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் விமான நிலையத்திலேயே கதறி அழுதார். இதனைக் கண்டு அங்கிருந்த அனைவரும் கலங்கினர்.
இந்நிலையில், முன்னணி தடகள வீராங்கனை தனது ட்விட்டர் பக்கத்தில், “தனா..உன் சகோதரியின் மறைவு பற்றி கேட்டதையடுத்து என் இதயம் வலிக்கிறது. உன் தற்போதைய மனநிலைமையை கற்பனைக்கூட செய்ய முடியவில்லை.
ஒரு தடகள வீரரின் உண்மையான தியாகம் இது. உனக்காகவும், உன் குடும்பத்துக்காகவும் வேண்டிக்கொள்கிறேன். உன் தங்கையின் ஆன்மா சாந்தியடையட்டும்” என்றார்.